ஓர் மனிதனின் சில நாட்கள்
கற்பனை விஞ்ஞான கதை

J Zero L Org

Browse: Home / Tamil / [ 15 ]

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]

[ 15 ]

By Author on 02/18/2010

மிகவும் சிக்கலான, ஆபத்தான, குழப்பத்திற்குரிய, விவாதத்துக்குரிய மேலும் பல கனதியான விடயங்களிற்கு செல்வதற்கு முன்னர், ஜொள் தனது அறிவியல் கண்டறிதல்களை எப்படியான அணுகுமுறைகள் மூலம் கையாண்டு இருக்கின்றான் என்று பார்ப்போம்.

பிரபஞ்சம் என்பது ஓர் மகா சமுத்திரமாக இருந்தால் ஜொளின் கண்டறிதல் அந்த மகா சமுத்திரத்தின் ஓர் துளியை அறிவுபூர்வமாக உணர்ந்து கொள்வது பற்றியது மட்டுமே. ஆயினும், தனது அறிவியல் கொள்கைகள் அந்த மகா சமுத்திரத்தின் ஒவ்வொரு துளியையும் அலசிப் பார்ப்பதற்கு உதவக்கூடும் என்றும் ஜொள் கருதினான்.

காலத்திற்கு காலம் அறிஞர்கள் பல்வேறுவிதமான கோட்பாடுகள், கொள்கைகள் மூலம் பிரபஞ்சத்திற்கும், மனிதனிற்கும் இடையிலான தொடர்புகளை உணர்ந்தறிய முற்பட்டு இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நுட்பங்களை கையாண்டு இருக்கின்றார்கள். இவற்றில் எவை மிகவும் சிறந்த துல்லியமான நுட்பங்கள் அல்லது எவை நடைமுறை ரீதியாக இலகுவான அணுகுமுறைகள் என்று கூறுவதற்கு இல்லை. அவை முற்றுப்பெற முடியாத தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்கு உரியவை.

கத்தியை காய்கறி வெட்டுவதற்கு பயன்படுத்த முடியும். அதே கத்தியை ஒருவனை குத்துவதற்கும் பயன்படுத்த முடியும். ஜொள் தனது அறிவியல் கண்டறிதல்களில் “எவை மனித குலத்திற்கு அவசியமானவை” என கருதினானோ, “எவை மனித குலத்திற்கு பயனுள்ளவை” என கருதினானோ, அவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினான், Explored – ஊடுருவி ஆராய்ந்தான்.

ஓர் அறிவியல் கோட்பாடு என்று வரும்போது அதை ஓர் தனிப்பட்ட இனத்திற்காக அல்லது ஓர் தனிப்பட்ட மதத்திற்காக அல்லது ஓர் தனிப்பட்ட மொழியிற்காக அல்லது ஓர் தனிப்பட்ட நாட்டிற்காக மட்டும் படைக்கவோ, பிரயோகம் செய்யவோ முடியாது. உதாரணமாக, மனித உடலின் குருதிச் சுற்றோட்ட தொகுதியின் அமைப்பினை விளக்குவதானால் அது சகல மனிதருக்கும் ஒரே மாதிரியானதாகவே அமைய முடியும். மனித உடலின் நரம்புத் தொகுதியின் அமைப்பினை விளக்குவதானால் அது சகல மனிதருக்கும் ஒரே மாதிரியானதாகவே அமைய முடியும்.

மேற்கூறியவாறே, இயற்கை, இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவுகள், சடப்பொருட்களின் தோற்றங்கள், சடப்பொருட்களின் அசைவுகள் போன்ற விடயங்கள் குறிப்பிட்ட ஓர் பிரிவின் எல்லைகளிற்கு உட்பட்டு இயங்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட முடியாது என ஜொள் கருதினான்: “They are Universal”

இவற்றை எங்ஙனம் உங்களுக்கு விளக்கலாம்?

ஜொள் கலாநிதி ரசலிற்கு வரைந்த ஓர் மடலில், “தற்போது ஆகாயத்தில் பயணிக்கின்ற வானவூர்திகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி பாதிப்புக்களிற்கு உள்ளாகின்றன. இதனை தடுப்பதற்கு உடனடியாக பல தற்காப்பு முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்” என்று கூறியிருந்தான். அவன் அந்த மடலை வரைந்த ஏக காலத்தில் ஓர் நாட்டில் விமான விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.

இங்கு ஜொள், “விமான விபத்துக்கள் தற்போது ஏற்படுகின்றன” என்று எழுதியமையால் விபத்து ஏற்பட்டதா? அல்லது, அவன் விபரிக்கின்ற சார்பு உலக கோட்பாட்டிற்கு அமைய விபத்து ஏற்பட்டதா? அல்லது, அவன் அவ்வாறு எழுதியபோது பூமியில் ஓர் இடத்தில் விமான விபத்து நடந்தது தற்செயலான ஓர் சம்பவமா?

ஜொள்ளின் கண்டறிதல்கள் என்பவை ஓர் மனிதன் பிரபஞ்சத்தை பரிபூரணமாக “உணர்ந்து” கொள்வதை மையப்படுத்தியதாக அமைந்து இருந்தனவேயொழிய, ஓர் மனிதன் பிரபஞ்சத்தை  பரிபூரணமாக “கட்டுப்படுத்துவதை” மையப்படுத்தியதாக இருக்கவில்லை – Man’s ability to “understand” the system , not the ability to “interrupt” the system.

தனது அறிவியல் கண்டறிதல்களை “ஓர் மனிதன் பிரபஞ்சத்தை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்த முடியுமா?” என்று ஆராய்ந்து பார்ப்பதில் ஜொள் கவனம் எடுக்கவில்லை. அப்படியானதொரு ஆராய்ச்சியில் அவனுக்கு அக்கறையும் இருக்கவில்லை.

சரி, மீண்டும் ஜொள்ளின் உணர்வியல், அறிவியல் விளக்கங்களை, அவற்றிடையேயான ஒப்புமைகளை அலசிப் பார்ப்போம்.

சார்பு உலகத்தை உணர்ந்து இருக்கும் ஒரே ஒரு காரணத்தினால் ஜொள் விபரிக்கின்ற விடயங்கள் எல்லாம் நிச்சயம் அறிவுபூர்வமாகவும் துல்லியமானவையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளதா? ஜொள்ளினால் இலகுவாக அரசியல் தொடக்கம் விஞ்ஞானம் வரை பல அடிப்படை கோட்பாடுகளை கண்டறிந்து விளக்கம் கொடுக்கக்கூடியதாக இருந்தது. ஆயினும், அவனிடம் அவை ஒவ்வொன்றையும் விரிவாக நிறுவுவதற்கு தேவையான ஆழமான விசய ஞானம், தொழில்நுட்ப அறிவு – Technical Knowledge காணப்பட்டதா?

பேரறிவு மூலம் அடிப்படை கொள்கைகளை – Concepts உணர்ந்து விளக்கம் கொடுக்கக்கூடியதாக இருந்தாலும், அவற்றை படிமுறைகளாக, விபரமாக விபரிப்பதற்கு சிற்றறிவின் உதவி தேவைப்பட்டது. போதிய சிற்றறிவு காணப்படாத சந்தர்ப்பங்களில் ஜொள்ளின் பேரறிவு மூலம் உருவாக்கப்பட்ட கொள்கைகளை “நடைமுறை அறிவியல்” பிரயோகங்களிற்கு ஏற்றவகையில் அவனது சிற்றறிவினால் விரிவாக விளக்க முடியவில்லை.

கலாநிதி ரசலிற்கு வரைந்த ஓர் மடலில் ஜொள் “பூச்சியம் முடிவிலிக்கு சமனானது [ Zero equals infinity ]” என்று கூறி இருந்தான். அதற்குரிய சான்றாக ஏறக்குறைய கீழ்க்காணப்படுவது போன்ற விபரண உருவையும் வழங்கி இருந்தான்:

பூச்சியமும், முடிவிலியும் ஒன்றிற்கு ஒன்று நிகரானது எனப்படும் ஜொள்ளின் கோட்பாட்டுடன் கணிதவியலாளர்கள், அறிஞர்கள்  உடன்படுவார்களா? அல்லது, மிகவும் தவறானதொரு முட்டாள்தனமான கொள்கையாக இதை அவர்கள் கணிப்பார்களா? தனது கற்பனை ஆராய்ச்சிகளில் இவ்வாறு பலப்பல புதுமையான கோட்பாடுகள் பற்றி கலாநிதி ரசலிற்கு ஜொள் தெரிவித்தான்.

ஜொள் தனது கற்பனை சூத்திரங்கள் துல்லியமானவையாக காணப்படவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. நேரத்திற்கு நேரம் அவன் எதேச்சையாக அவற்றை பல்வேறு தருணங்களில் ஆராய்ந்து கூறினான். ஜொள்ளைப் பொறுத்தவரையில் பலவிதமான செய்திகளை குறிபிட்ட சிலரிடம் உடனடியாக பரிமாறிக்கொள்வதே அப்போது முக்கியமான காரியமாக தென்பட்டது. அவை சரியானதாகவோ, தவறானதாகவோ, அல்லது சமூக அங்கீகாரம் பெறக்கூடியனவாகவோ விளங்கவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

ஜொள் விபரிக்கின்ற விடயங்கள், விளக்கங்கள் சரியானதாகவோ, தவறானதாகவோ, அல்லது வடிகட்டிய முட்டாள் தனமாகவோ காணப்படுவது ஒருபுறம் இருக்க,  காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவுக்கு அவன் கூறிய விடயங்கள் எவ்வாறு நடைமுறை ரீதியாக காந்தருவம் நாட்டில் பிரயோகம் செய்யப்பட்டன?

அரச தலைவரிடம் “1 + 2 = 3″ என ஜொள் கூறினான் என்று வைத்துக் கொள்வோம்.  இங்கு ஒன்று, இரண்டு ஆகிய இலக்கங்கள் மட்டுமே அரச தலைவர் பற்றீசாவுக்கு பிடித்து இருந்தால், ஒன்று, இரண்டு ஆகிய இலக்கங்களில் மட்டுமே அரச தலைவர் பற்றீசாவுக்கு ஆர்வம் இருந்தால், அதேசமயம் அவர் இலக்கம் மூன்றை புறக்கணிப்பு செய்தால் அது ஜொள்ளின் தவறாகுமா? இலக்கங்கள் ஒன்று, இரண்டு என்பவற்றை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அதேசமயம் இலக்கம் மூன்றை புறக்கணிப்பு செய்துவிட்டு, ஜொள்ளின் சிந்தனை தவறானது என அரச தலைவர் பற்றீசா கூறினால் அது ஜொள்ளின் தவறாகுமா?

ஜொள் வழங்கிய பல்வேறு தகவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமான தகவல்களை மட்டுமே அரச தலைவர் பற்றீசா பயன்படுத்திக் கொண்டாரா?

காந்தருவம் நாட்டின் இனச்சிக்கலை தீர்ப்பதற்கு ஜொள்ளினால் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு திட்டம் காந்தருவம் நாட்டில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களுக்காகவும் அமைந்து இருந்ததேயொழிய காந்தருவம் நாட்டில் காணப்படும் எந்தவொரு மதத்திற்கோ அல்லது மொழியிற்கோ அல்லது இனத்திற்கோ ஆதரவானதாகவோ அல்லது எதிரானதாகவோ அது அமைந்து இருக்கவில்லை.

ஜொள் காந்தருவம் நாட்டின் நிலப்பரப்பினை ஓர் முழுமையான பகுதியாக நோக்கி இருந்தான். அந்த முழு நிலப்பரப்பில் நிலவக்கூடிய பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது பற்றியதாகவே அவனது அணுகுமுறை – வியூகம் கையாளப்பட்டு இருந்தது.

ஜொள்ளின் சிந்தனைகளை காந்தருவம் நாட்டின் அரச தலைவர் பற்றீசா, மதபீடாதிபதிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் எவ்வாறு மதிப்பளித்து எடை போட்டார்கள்? அவர்களினால் ஜொள்ளின் பேரறிவுக்கு நிகரான வகையில் நடைமுறை வாழ்வில் சிந்தித்து செயற்பட முடிந்ததா? ஜொள்ளின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்ள முடியாத சமயத்தில் அவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை ஜொள்ளிற்கு – அவனது சிந்தனைகளிற்கு எதிராக மேற்கொண்டார்கள்? அவற்றை ஓர் தனிமனிதனாக நின்று எவ்வாறு ஜொள் எதிர்கொண்டான்?

அறிவியல் சிந்தனைகள் என்பவை அரசதலைவர் பற்றீசா, மதபீடாதிபதிகள், விடுதலைப்போராளி சைமன், காந்தருவம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், இதர பல்வேறு தரப்பினரதும் சிற்றறிவை திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட முடியுமா? அறிஞர்கள் என்போர் சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட முடியுமா?

Posted in Tamil | Tagged பதினைந்து

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]
« [ 14 ] [ 16 ] »

© 2010 J Zero L Org | பின்னூட்டல்