கலாநிதி ரசலுக்கு தனது அறிவியல் கண்டறிதல்கள் பற்றி எழுதிய ஓர் மடலில் ஜொள் ஏறக்குறைய இவ்வாறு எழுதி இருந்தான்:
Only the experience in Love can affect the speed of the Jet!
அதாவது, “அன்பு – காதலில் இருக்கக்கூடிய அனுபவம் ஒன்று மட்டுமே விண்கலத்தின் வேகத்தில் செல்வாக்கு செலுத்த முடியும்!” என கூறினான்.
விண்கலம் என்று அவன் எதை குறிப்பிடுகின்றான்? விண்கலத்திற்கும் அவனது கண்டறிதல்களுக்கும் உள்ள தொடர்புகள் எவை? விண்கலம் எனப்படும் பதத்தை எப்படி, எவ்வாறு அவன் கண்டறிந்து பயன்படுத்தினான்? இங்கு, எவர் அனுபவம் பற்றி பேசப்படுகின்றது?
பேரறிவு ஜொள்ளை பூரணமாக கட்டுப்படுத்திய காலத்தில், பேரறிவை பூரணமாக தனது வாழ்வில் அனுபவித்த காலத்தில், பேரறிவை பூரணமாக பயன்படுத்தி பல்வேறு பரிசோதனைகளை நடைமுறை வாழ்வில் மேற்கொண்ட சமயத்தில் அவன் இயற்கை, மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்து காணப்படும் பல்வேறு சூக்குமங்களை நேரடியாக அறிந்து இருந்தான்.
யதார்த்த உலகம் பல்வேறு அடுக்குகளினால் [ Layers ] பின்னப்பட்ட சூக்கும உலகங்களினால் உருவாக்கப்பட்டு இருப்பதை ஜொள் உணர்ந்தான்.
இதை உங்களுக்கு எவ்வாறு விளக்கலாம்?
நீங்கள் குறிப்பிட்ட ஓர் விளையாட்டில் சர்வதேச மட்டத்தில் தலைசிறந்த வீரனாக உருவாகப் போகின்றீர்கள் என்று வைப்போம். ஓர் சாதாரண மனிதனாகிய நீங்கள் பிரபல விளையாட்டு வீரனாக உருவாகப் போகின்றீர்கள்.
சாதாரண மனிதன் —–> ஓர் பிரபல விளையாட்டு வீரன்
ஓர் நிலையில் இருந்து இன்னோர் நிலை உருவாகப் போகின்றது. இதற்கு குறிப்பிட்ட தனிநபரின் – உங்களின் முயற்சி, பிரயாசை தேவைப்படும். ஆள் மாறுபடப் போவது இல்லை. அவரது – உங்கள் நிலை மாத்திரமே மாறுபடப் போகின்றது.
சர்வதேச மட்டத்தில் தலை சிறந்த வீரனாக உருவாகுவதற்கு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி, திறமை மாத்திரம் உங்களுக்கு இருந்தால் போதுமா? இல்லை, உங்களுக்கு பலவிதமான தொடர்புகள், வழிகாட்டுதல்கள், வசதிகள், வாய்ப்புக்கள், வெளி அழுத்தங்கள், மற்றும் இன்னோரன்ன காரணிகளின் பங்களிப்புக்கள், ஒத்துழைப்புக்கள் தேவைப்படும்.
தனிநபராகிய உங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்ற மேற்கண்ட பலவித காரணிகள், அவற்றின் போக்குகள் பல்வேறு அடுக்குகளினால் பின்னப்பட்டுள்ள சூக்கும உலகங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஜொள் உணர்ந்து கொண்டான்.
தவிர, சிலவேளைகளில் உங்களுக்கு உங்கள் உள்ளுணர்வு “சர்வதேச மட்டத்தில் தலை சிறந்த வீரனாக நீங்கள் உருவாகப் போகின்றீர்கள்!” என்று கூறக்கூடும். உங்களின் இந்த உள்ளுணர்வுக்கும், யதார்த்த உலகத்தை கட்டுப்படுத்தும் பல்வேறு அடுக்குகளினால் பின்னப்பட்டுள்ள சூக்கும உலகங்களிற்கும் அந்தரங்க தொடர்புகள் உள்ளதாகவும் ஜொள் உறுதியாக விளங்கிக் கொண்டான்.
ஓர் விண்கலம் பூமியில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்படும்போது, அது புவியீர்ப்பு விசையின் தப்பு வேகத்தை மிஞ்சி அண்டவெளியில் சுதந்திரமாக சஞ்சாரம் செய்வதற்கு, ஓர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதன்மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும். இதற்கு பேராற்றல் – சக்தி, மற்றும் அதை உருவாக்குவதற்கு தேவையான எரிபொருளும் தேவைப்படும்.
மனித வாழ்வும் அடிப்படையில் அச்சொட்டாக இதே கோட்பாட்டுடன் தொடர்புபட்டது என ஜொள் அறிந்து கொண்டான். எவ்வாறு?
சிற்றறிவின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய, சாதாரண ஆற்றல்களை கொண்ட மனிதன் பூலோகத்தில் இருக்கின்றான். இவ்வாறே, பேரறிவின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய, அசாதாரண ஆற்றல்களைக் கொண்ட கணணி மனிதனும் பூலோகத்தில் இருக்கின்றான். அத்துடன், சிற்றறிவு, பேரறிவு ஆகியவை சமநிலை அடைந்த நிலையில், தனக்கு விருப்பமான நேரங்களில் மனிதனாகவோ அல்லது கணணியாகவோ இயங்கக்கூடிய ஆற்றல்களைக் கொண்ட மனிதனும் பூலோகத்தில் இருக்கின்றான். இந்த மூன்றாவது மனிதனை “கணணி மனிதன் – Computer-Man” என ஜொள் பெயர் சூட்டினான்.
பூமியின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் பொருள் விண்வெளியில் சுதந்திரமாக சஞ்சரிப்பதற்கு எவ்வாறு அதற்கு பேராற்றல் – சக்தி தேவைப்படுமோ, அவ்வாறே, சாதாரண மனிதன் ‘கணணி-மனிதனாக’ மாறுவதற்கு “யதார்த்த உலகை கட்டுப்படுத்தும் பல்வேறு அடுக்குகளினால் அமைந்த சூக்கும உலகங்களை அவன் உணர்ந்து கொள்வது, மற்றும் மற்றைய மனிதர்களில், இயற்கையில் எதுவித நிபந்தனைகளும் அற்றவகையில் அவன் ‘அன்பு – காதல்’ செய்வதில் ஆழ்ந்த அனுபவத்தை பெற்றுக் கொள்வது” ஆகிய தகமைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என ஜொள் உணர்ந்து கொண்டான்.
சரி, இந்தக் “கணணி-மனிதன்” மூலம் சாதிக்கப் படக்கூடியவை எவை? ஓர் “இலட்சிய கணணி-மனிதன்” மூலம் சார்பு உலகத்தை பரிபூரணமாக தரிசிக்க முடியுமா? ஓர் இலட்சிய “கணணி-மனிதனின்” ஆற்றல்கள் எவை?
கலாநிதி ரசலுக்கு எழுதிய ஓர் மடலில் ஜொள் ஏறக்குறைய இவ்வாறு எழுதி இருந்தான்:
Man means working speed and talents of a normal person
Computer means working speed and talents of a skillful person
Computer-Man means a person who wants to be a normal person or skillful person whenever he changes himself time to time!
அதாவது “மனிதன் என்பது சாதாரண தொழிற்படும் நேரத்தையும், சாதாரண ஆற்றல்களையும் கொண்ட ஓர் சாதாரண மனிதனை குறிக்கின்றது. கணணி என்பது அசாதாரண ஆற்றல்களையும், அசாதாரண தொழிற்படும் நேரத்தையும் கொண்ட ஓர் திறமையுள்ள மனிதனை குறிக்கின்றது. கணணி-மனிதன் என்பது நேரத்துக்கு நேரம் தன்னை சாதாரண மனிதனாகவோ அல்லது அசாதாரண மனிதனாகவோ மாற்றிக்கொள்ளும் ஆற்றலுடைய ஓர் மனிதனை குறிக்கின்றது”; இவ்வாறு கூறி இருந்தான்.
தனது மடலில் தொடர்ந்து இவ்வாறு எழுதி இருந்தான்:
Four Computer-Men can connect their ideas and can lead all human beings to whatever ideas, they already have connected!
[ To prove "Law for Spring" Scientifically, I send you my personal story as soon as possible! ]
அதாவது, “நான்கு கணணி-மனிதர்கள் தங்கள் சிந்தனைகளை தம்மிடையே பரிமாற்றம் செய்துகொள்ள முடியும், தமது சிந்தனைகளின் அடிப்படையில் அந்நான்கு பேரும் சேர்ந்து பூமிப்பந்தில் உள்ள சகல மனிதர்களையும் வழிநடாத்த முடியும். அந்நான்கு கணணி-மனிதர்களும் ஏற்கனவே ஒருவருடன் ஒருவர் தொடர்பை ஏற்படுத்தப்பட்டு விட்டார்கள். [ 'Law for Spring' எனப்படுகின்ற கோட்பாட்டை விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பதற்கு எனது தனிப்பட்ட வாழ்க்கை சரிதத்தை விரைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் ]“; இங்ஙனம் கலாநிதி ரசலுக்கு ஜொள் கூறி இருந்தான்.
நான்கு கணணி மனிதர்கள் சேர்ந்து பூமிப்பந்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் வழிநடாத்த முடியுமா?
சிற்றறிவும், பேரறிவும், அவற்றின் ஒன்றுடனான இன்னொன்றின் சமநிலையும் ஒருவன் மனிதனாகவோ, கணணியாகவோ, கணணி-மனிதனாகவோ வாழ்வதை தீர்மானிப்பதாக ஜொள் கருதினான். அத்துடன், சிற்றறிவுடன் சமநிலை அடையாத “வெற்று பேரறிவு” மூலம் யதார்த்த உலகில் சமூக அங்கீகாரம் பெறக்கூடிய வகையில் ஓர் மனிதன் எதையும் சாதிக்க முடியாது என்றும் ஜொள் நினைத்தான். முக்கியமாக, “சிற்றறிவுடன் சமநிலை அடையாத ‘வெற்று பேரறிவு’ ஓர் மனிதனை தொடர்ச்சியாக கட்டுப்படுத்துவது அந்த மனிதனுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும்” என்றும் ஜொள் அஞ்சினான்.
“நான்கு கணணி-மனிதர்கள் ஏற்கனவே ஒருவருடன் ஒருவர் தொடர்பை ஏற்படுத்தப்பட்டு விட்டார்கள்” என்று ஜொள் கூறி இருக்கின்றான். அந்த நான்கு பேரும் யார்? உடலியல் ரீதியாக அவர்களுக்கு தம்மிடையே ஒருவருடன் ஒருவர் பரீட்சயம் – அறிமுகம் உள்ளதா?
ஓர் கணணி-மனிதனுக்கு அவன் ஓர் கணணி-மனிதன் என்று தெரிந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று ஜொள் கருதினான். அதாவது, “ஏற்கனவே ஒருவன் கணணி-மனிதனாக இருக்கக்கூடும். ஆனால், அவன் தன்னை ஓர் கணணி-மனிதன் என்று அறியாமல் இருக்கலாம்” இவ்வாறு ஜொள் நினைத்தான்.
இப்போது ஜொள்ளின் நடவடிக்கைகளை மீள் பரிசீலனை செய்து பார்ப்போம்:
கலாநிதி ரசல், காந்தருவம் நாட்டின் அரச தலைவர் பற்றீசா, வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த மதபீடாதிபதிகள், மற்றும் அறிமுகம் அற்ற பல நூறு பேருடன் ஜொள் மின்னல் வேகத்தில் தகவலை பரிமாறி இருக்கின்றான். இவர்களில் நான்கு பேர் கணணி-மனிதர்களாக இருக்க முடியுமா?
ஜொள் கலாநிதி ரசலிடம் சமர்ப்பித்த சிந்தனைகள் காந்தருவம் நாடு தவிர, பல்வேறு சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற முக்கியத்தர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைப்புக்களின் பார்வை வரை சென்றது. அவ்வாறாயின், தனது ஒரே மாதிரியான சிந்தனைகளை அறிமுகம் இல்லாத நான்கு கணணி-மனிதர்களிடையே பரப்புரை செய்து, அந்த நான்கு பேரினிடையே தொடர்பாடலை ஏற்படுத்தி, அந்த நான்கு இலட்சிய கணணி-மனிதர்களையும் பல்வேறு அடுக்குகளினால் அமைந்த சூக்கும உலகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த யதார்த்த உலகில் ஜொள் வெற்றிகரமாக இணைத்து விட்டானா?
கலாநிதி ரசல் அவர்கள் மூன்று செய்மதிகள் மூலம் பூமிப்பந்தினை இணைக்க முடியும் என்று கூறி இருந்தார். அவர் அவ்வாறு கூறி சுமார் ஐம்பது வருடங்களின் பின்னர், நான்கு “கணணி-மனிதர்கள்” சேர்ந்து பூமிப்பந்தில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களையும் வழிநடாத்த முடியும் என்று ஜொள் கலாநிதி ரசலிடம் கூறி இருந்தான்.
கலாநிதி ரசலின் எதிர்வுகூறல் சுமார் இருபத்தைந்து வருடங்களின் பின்னர் பூமியில் நடைமுறை உண்மையானதை போன்று ஜொள்ளின் எதிர்வுகூறலும் ஓர் நடைமுறை உண்மையா? அல்லது, ஜொள்ளின் எதிர்வுகூறல் ஓர் பிரமை மட்டும் தானா? பூமிப்பந்தினை மூன்று அல்ல, பல நூறு செய்மதிகள் இணைக்கின்றன. இவ்வாறே, மனித குலத்தை பலநூறு கணணி-மனிதர்கள் ஒன்று சேர்ந்து வழி நடாத்துகின்றார்களா?
மீண்டும் ஜொள் உருவாக்கிய கற்பனை சூத்திரங்களை நாம் மறு பரிசீலனை செய்து பார்ப்போம். இவற்றின் உண்மையான அர்த்தம் யாதாக இருக்கலாம்?



J Zero L Org