ஓர் மனிதனின் சில நாட்கள்
கற்பனை விஞ்ஞான கதை

J Zero L Org

Browse: Home / Tamil / [ 11 ]

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]

[ 11 ]

By Author on 02/09/2010

வழமையில் அறிவியல் கண்டறிதல்களை மேற்கொள்பவர்கள் குறிப்பிட்ட கண்டறிதலுக்கான உரித்துமம் தமக்கு சட்டரீதியாக கிடைக்கும்வரை தமது கண்டறிதல்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் மிகவும் இரகசியமாக வைத்து இருப்பார்கள். அத்துடன், கனதியான ஆராய்ச்சிகளை தனிநபராக முன்னெடுக்கவும் மாட்டார்கள். ஆனால், இவன் மாத்திரம் ஏன் வழமைக்கு மாறான விதத்தில் ஓர் மார்க்கமாக இயங்குகின்றான்?

ஜொள் தனது கண்டறிதல்களை முதலில் தான் கல்வி கற்கின்ற பல்கலைக்கழக துறைத் தலைவருடனும், பீடாதிபதியுடனுமே பகிர்ந்து கொண்டான். எனினும், அவர்கள் ஜொள்ளின் கண்டறிதல்களை ஓர் பொருட்டாகவே மதிக்கவில்லை. “உனது பெயர் என்ன? எத்தனையாம் வருடம் இங்கு கற்கின்றாய்?” போன்ற வினாக்களுடன் அவனுடனான உரையாடலை மிகவும் சுருக்கமாக நிறுத்திக் கொண்டனர்.

தனது கண்டறிதல்களை அறிவுபூர்வமாக உறுதிப்படுத்தக்கூடிய, தற்போது உயிருடனும் இருக்கும் ஒரே ஒரு நபர் “கலாநிதி ரசல் அவர்கள் மட்டுமே!” என்பது ஜொள்ளிற்கு மிக நன்றாக தெரிந்து இருந்தது. ஆயினும், கலாநிதி ரசலை சந்தித்து உரையாடுவதற்கு முன்னர் அவன் தனது பல்கலைக்கழக துறைத் தலைவர், பீடாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்களின் சிபாரிசுடன் கலாநிதி ரசலை சந்திப்பதையே விரும்பி இருந்தான்.

பல்கலைக்கழக துறைத் தலைவர், பீடாதிபதி ஆகியோர் ஆதரவுக்கரம் நீட்டாமை ஜொள்ளிற்கு பலத்த ஏமாற்றத்தையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியது. அத்தருணத்தில் ஜொள்ளின் அடுத்தகட்ட செயற்பாடு எங்ஙனம் இருந்தது?

காந்தருவம் நாட்டில் பல்கலைக்கழக அடையாள அட்டை என்பது மிகவும் முக்கியமானதொரு ஆவணமாக இருந்தது. எதேச்சையாக காந்தருவம் நாட்டு காவல்துறையினர், படைவீரர்கள் பொதுமக்களை வழிமறித்து விசாரணை செய்யும்போது தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அடையாள அட்டை உறுதுணையாக இருந்தது.

ஜொள்ளின் பல்கலைக்கழக அடையாள அட்டையின் ஒரு பக்கத்தில் அவனது புகைப்படமும், மாணவர் அடையாள இலக்கமும், பல்கலைக்கழக பீடாதிபதியின் கையொப்பமும், இலச்சினையும் இருந்தன. மறுபக்கம் வெற்றிடமாக இருந்தது. அடையாள அட்டையின் குறிப்பிட்ட வெற்றிடப் பகுதியில் சிவப்பு மை பேனா ஒன்றினால் ஓர் கற்பனை சூத்திரத்தை எழுதியபின், அதன் அடிப்பகுதியில் ஜொள் கீழ் உள்ளவாறு எழுதினான்:

I don’t know Dr. Russell’s address. That is why I came here!

மறுநாள் நேராக பல்கலைக்கழக பீடாதிபதியின் அலுவலகத்திற்கு மீண்டும் சென்றவன், “வருகை தந்த விடயம் யாது?” என வினாவிய பல்கலைக்கழக பீடாதிபதியின் கைகளில் தனது “விசேடமாக தயாரிக்கப்பட்ட” அடையாள அட்டையை கையளித்தான்.

அந்த விசேட அடையாள அட்டையை வாங்கி பார்த்த பீடாதிபதி மிகவும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்து விட்டார். ஜொள்ளைப் பார்த்து மிகவும் சத்தமாக இவ்வாறு கத்தினார்:

You shouldn’t have written here!

பல்கலைக்கழக பீடாதிபதி உடனடியாக தனது செயலாளரின் பெயரை தனது தாய்மொழியில், உரத்த குரலில் கூவினார். பதற்றத்துடன் ஓடிவந்த செயலாளரிடம் காந்தருவம் நாட்டு தொலைபேசி தகவல் நூலை உடனடியாக எடுத்து வருமாறு உத்தரவிட்டார். குறிப்பிட்ட பெண் செயலாளரும் பதற்றத்துடன், விரைவாக ஓடிச்சென்று, தட்டித்தடவி தகவல் நூலை கண்டுபிடித்த பின்னர், அதை பீடாதிபதியிடம் கையளித்தார்.

கிடுகிடுவென தகவல் நூலின் பக்கங்களை மிக வேகமாக புரட்டியவர், உடனடியாகவே கலாநிதி ரசலின் இல்லத்தின் முகவரியையும், தொலைபேசி இலக்கத்தையும் ஓர் சிறிய கடதாசியில் கடுகதியாக எழுதி ஜொள்ளிடம் கொடுத்தார்.

பல்கலைக்கழகத்தின் முக்கியமானதொரு ஆவணத்தில் மிகவும் சாதாரணமாக சிவப்பு மை பேனாவினால் ஜொள் மேற்கண்ட விடயத்தை எழுதியது பீடாதிபதிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பீடாதிபதி அதிர்ச்சி அடைந்தமைக்கு மேற்கண்ட ஒரு விடயம்தான் காரணமாக இருக்குமா அல்லது ஜொள் அதில் எழுதிய கற்பனை சூத்திரம் காரணமாக இருக்குமா?

ஆரம்பத்தில் தனது அறிவியல் கண்டறிதல்களை ஏளனமாக பார்த்த பல்கலைக்கழக பீடாதிபதியிடம் மன்னிப்பு கேட்டு, அத்துடன் அவருக்கு நன்றியும் தெரிவித்த பின்னர், ஜொள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறி, தனது அடுத்த கட்ட செயற்பாட்டை பற்றி சிந்தித்தவாறு நடக்கத் தொடங்கினான்.

மனித குலத்திற்கு தனது கண்டறிதல்கள் மிகவும் முக்கியமானதொரு விடயம் என ஜொள் உணர்ந்து இருந்தான். காந்தருவம் நாட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த தனது கண்டறிதல்கள் நிச்சயம் உதவும் என்றும் அவன் உறுதியாக நம்பி இருந்தான்.

“புத்திக்கூர்மை பொறியினுள் – Intelligent Trap” அகப்பட்டுள்ள மக்களிடம் தனது கண்டறிதல்களை வழமையான “சம்பிரதாய முறைகள் – Traditional Ways” மூலம் உடனடியாக விளக்க முடியாது என்று ஜொள் உணர்ந்து கொண்டான். இதனாலேயே, தற்போது இந்த விடயத்தை சாணக்கியமான முறைகளில் கையாள்வதற்கு அவன் தனது சிற்றறிவுக்கு பதிலாக அவனது பேரறிவை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதித்து இருந்தான். இதன்பின்னரே, அவனது பேரறிவு தத்துவ ஆராய்ச்சி மூலம் மூன்று ஒரேமாதிரியான ஆவணங்களை உருவாக்கி சமய தலங்களில் சமர்ப்பித்தது.

ஜொள்ளிற்கு அவசரமாக கலாநிதி ரசல், மற்றும் அரச தலைவர் பற்றீசா ஆகியோரின் உதவியும், ஒத்துழைப்புமே தேவைப்பட்டது. ஆயினும், கலாநிதி ரசலை சந்திப்பதற்கு மதபீடாதிபதிகளின் உதவி தேவைப்பட்டது. ஏன்?

ஜொள்ளின் கண்டறிதல்கள் அறிவியலுடன் தொடர்புடையதாக, அறிவுபூர்வமானதாக இருப்பினும், அவனுக்கு ஆன்மீகவாதிகளின் ஆன்மபலமும் தேவைப்பட்டது. அவனது கண்டறிதல்கள் அறிவியல் மட்டுமன்றி ஆன்மிகவியலும் கலந்தவை.

தத்துவ ஆராய்ச்சி செய்யப்பட்டு, மூன்று சமய தலங்களிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் “தகவல் பரிமாற்றத்திற்கான கையளிப்பு” என்பது தவிர, வெவ்வேறு சமய தலங்களில் காந்தருவம் நாட்டிற்கான ஓர் பிரார்த்தனைக்குரிய வேண்டுதலாகவும் இருந்தது.

சரி, சமய தலங்களில் தனது ஆவணங்களை கையளித்த ஜொள், குறிப்பிட்ட சமய தலங்களின் மத பீடாதிபதிகளை நேரடியாக சந்தித்து உரையாடுவதற்கு முயற்சி செய்தானா?

தனது பிறப்பின் காரணமாக பின்பற்றுகின்ற சமயத்துக்குரிய வழிபாட்டு தலத்திற்கு மாத்திரம் ஜொள் மீண்டும் சென்றான். காலை பிரார்த்தனைக்கு வந்த சுவாமிகளிடம் அவன் கீழ்வரும் கேள்வியை தொடுத்தான். குறிப்பிட்ட சமய தலத்தில் வாழ்கின்ற இதே சுவாமிகளே முன்பு ஜொள்ளின் தத்துவ ஆராய்ச்சி செய்யப்பட்ட ஆவணத்தை கர்ப்பக்கிரகத்தில் கையேற்று இருந்தார்:

சுவாமியை காணலாமா?

சுவாமிகள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, தனது ஒரு கையை ஆகாயத்தை நோக்கி சுட்டிக்காட்டி, ஜொள்ளிற்கு இவ்வாறு பதில் கூறினார்:

கடவுள் ஏழு மணிக்கு இருப்பார்!

சுவாமிகள் ஏன் கடவுள் ஏழு மணிக்கு இருப்பார் என்று ஜொள்ளிற்கு பதில் அளித்தார்? உண்மையில் அதன் உள்ளார்ந்தம் என்ன? கடவுள் ஏழு மணி தவிர வேறு நேரங்களில் இருக்கமாட்டாரா? சுவாமிகளின் மேற்கண்ட பதிலுக்கு காரணம் யாதாக இருக்கலாம்?

“அவசரம், விளம்பரம், சிவநடனம், இரவு ஏழுமணிக்கு காந்தருவம் நாட்டு அரச தொலைக்காட்சியில் நேரஞ்சல்” என ஜொள் முன்பு சமர்ப்பித்த ஆவணத்தில் கூறப்பட்டு இருந்ததே, அதற்கும் சுவாமிகளின் பதிலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? சுவாமிகளின் பதில் ஜொள்ளிற்கு திருப்தி அளித்ததா?

அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் ஜொள் மீண்டும் அதே சமய தலத்தில் வாழ்கின்ற பிறிதொரு சுவாமிகளிடம் சென்று, ஓர் பிரத்தியேக தியான அறையில் இருந்து வந்த சுவாமிகளிடம் இவ்வாறு கேட்டான்:

கலாநிதி ரசலை நான் உடனடியாக சந்திக்கிறதுக்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா?

எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரிடம் இருந்து தொடுக்கப்பட்ட, எதிர்பாராத வினாவினால் சுவாமிகள் நன்றாகவே குழப்பம் அடைந்துவிட்டார். ஜொள்ளின் வினாவிற்கு அவரால் உடனடியாக பதில் கூற முடியவில்லை. மிகவும் குழப்பம் அடைந்த முகத்துடன் ஜொள்ளிடம் ஏறக்குறைய கீழ்வருமாறு கூறினார்:

யார் அவர் ரசல்? நீங்கள் பொதுஜனங்களின் வாழ்க்கை போன்றது அல்ல எங்கள் வாழ்க்கை, நாங்கள் ஆன்மீகவாதிகள், கடவுளை சந்திப்பதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கின்றோம். தியானிப்பது தவிர வேறு ஒரு சிந்தனையும் எங்களிடம் இல்லை.

ஜொள் அப்பாவித்தனமாக சுவாமிகளிடம் கேட்ட கேள்வி ஒருபுறம் இருக்க, சுவாமிகளின் அப்பாவித்தனமான பதிலை கேட்ட ஜொள்ளிற்கு  பெருத்த ஏமாற்றமாக இருந்தது. சாதாரண வாழ்க்கையை துறந்து, காவி உடுத்து, துறவியாக, யதார்த்த உலகை மறந்து, கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் சுவாமிகளை பார்க்க அவர்மீது அவனுக்கு மிகுந்த இரக்கம் தோன்றியது. அவசரம், ஆபத்திற்கு உதவமுடியாத ஓர் முட்டாளாக இருக்கின்றாரே என்று அவர் மீது ஜொள்ளிற்கு சற்று சீற்றமும் ஏற்பட்டது.

சமயங்கள், சமய வழிபாட்டு தலங்கள் எதற்காக இருக்கின்றன? மதபீடாதிபதிகள், சுவாமிகள் எதற்காக இருக்கின்றார்கள்? கண்களில் தெரியாத கடவுளை ஆராதிப்பதற்கு மட்டுமாகவா? கண்களில் காணாத கடவுளை கண்டுபிடிப்பதற்காக மட்டுமாகவா? கடவுளுடன் ஒளித்து பிடித்து விளையாடுவது மட்டுமே இவர்கள் பணியா?

Posted in Tamil | Tagged பதினொன்று

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]
« [ 10 ] [ 12 ] »

© 2010 J Zero L Org | பின்னூட்டல்