ஜொள்ளின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஒருபுறம் இருக்க, அவை உண்மையாகவோ, பொய்யாகவோ, அல்லது வெறும் பிரமையாகவோ இருப்பதும் ஒருபுறம் இருக்க, அவன் தனிப்பட எப்படியான நிலமையில் வாழ்ந்து கொண்டு தனது செயற்பாடுகளை மேற்கொள்கின்றான்?
ஜொள் காந்தருவம் நாட்டின் தலைநகருக்கு மிகவும் அருகாக உள்ள ஓர் நகரத்தில் வாழ்ந்தான். அவனது குடியிருப்பை சுற்றி முழுவதுமாக காந்தருவம் நாட்டின் பிரதான தாய்மொழியை பேசுகின்ற, பிரதான மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் கூட்டமே வாழ்கின்றது. ஜொள் வாழ்கின்ற வாடகை குடியிருப்புக்கு மிக அண்மையாக காந்தருவம் நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் பின்பற்றுகின்ற ஓர் சமய வழிபாட்டுதலம் இருக்கின்றது.
ஜொள்ளிற்கு சர்வதேச மொழியும், அவனது தாய்மொழியும் மாத்திரமே சரளமாகத் தெரியும். காந்தருவம் நாட்டின் பெரும்பான்மை மக்கள் பேசுகின்ற பிரதான மொழி அவனுக்கு சிறிதளவு மாத்திரமே விளங்கும். அவனால் காந்தருவம் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் தாய்மொழியை எழுத்துக்கூட்டி வாசிக்க முடியும். ஆனால், அந்த மொழியை நடைமுறை வாழ்வில் அவன் பேசுவது இல்லை. ஜொள் காந்தருவம் நாட்டின் தலைநகரில் வாழ்ந்த காலத்தில் சர்வதேச மொழியை மட்டுமே தனது தாய்மொழியில் உரையாடாத மக்களுடன் தொடர்பாடலில் ஈடுபட்டபோது பயன்படுத்தினான்.
ஜொள்ளுடன் அவனது வீட்டில் தாய், தந்தை, மணம் முடிக்காத ஓர் சகோதரி, மணம் முடிக்காத ஓர் சகோதரன் ஆகியோர் வாழ்ந்தனர். அவனது மணம் முடித்த இரண்டு சகோதரிகள் வேறு நாடுகளில் வசித்தனர். ஜொள்ளிற்கு பல உறவினர்கள் காந்தருவம் நாட்டின் தலைநகரில் இருந்தனர். ஆனால் அவன் ஒரு சிலருடன் மாத்திரமே பழகி வந்தான். இவ்வாறே, ஒரு சில நண்பர்களுடனும் மாத்திரமே பழகி வந்தான்.
கலாநிதி ரசல், அரச தலைவர் பற்றீசா ஆகியோருடன் ஜொள் தொடர்பை ஏற்படுத்தியது, மற்றும் அவனது அறிவியல் கண்டறிதல் சம்மந்தமான செயற்பாடுகளிற்கு அவனது குடும்பத்தில் மிகவும் கடுமையான எதிர்ப்பு காணப்பட்டது. ஜொள்ளின் சகோதரன் ஓர் பெளதிகவியல் ஆராய்ச்சியாளன். ஜொள்ளின் செயற்பாடுகளை அவனது சகோதரன் மிகவும் கடுமையாக எதிர்த்தான். காந்தருவம் நாட்டில் நிலவிய உயிர் வாழ்வுக்கு உத்தரவாதம் இல்லாத “பாதுகாப்பற்ற சூழலே” ஜொள்ளின் செயற்பாடுகளை அவனது குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தமைக்கான பிரதான காரணமாக அமைந்தது.
ஜொள்ளிற்கும், தமக்கும் ஜொள்ளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் உயிர் ஆபத்துக்கள், மற்றும் தேவையற்ற பல பிரச்சினைகள் வரக்கூடும் என்று அவனது குடும்பத்தினர் மிகவும் அஞ்சினர். இவற்றுடன், ஜொள்ளின் புதினமான நடவடிக்கைகள் பற்றி கேள்வியுற்ற அவனது சகோதரனின் நண்பர்கள் “ஜொள்ளிற்கு திடீரென என்ன நடந்தது?” என்று சகோதரனிடம் கேட்கத் தொடங்கினர். பலரிடம் இருந்து ஜொள்ளின் சகோதரன் வேலை செய்கின்ற அலுவலகத்திற்கு ஜொள்ளின் “புதினமான செயற்பாடுகள்” சம்மந்தமாக விசாரித்து பல தொலைபேசி அழைப்புக்கள் வந்து குவிந்து கொண்டு இருந்தன. ஜொள்ளின் சகோதரன் ஜொள்ளினது புதினமான செயற்பாடுகள் காரணமாக பேரதிர்ச்சி அடைந்து இருந்தான். தனது அன்புக்குரிய ஒரே ஒரு சகோதரன் ஜொள் மீட்கப்படமுடியாத முழுப் பைத்தியமாகி விட்டானே என்று நினைத்து மிகவும் கவலைப்பட்டான்.
காந்தருவம் நாட்டின் அரச தலைவர் பற்றீசாவின் முதன்மை செயலாளர் ஜொள்ளின் சிந்தனைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி தெரிவித்து, அவனது சிந்தனைகளை தாங்கள் விரைவில் பரிசீலித்து, ஆகவேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக எழுதப்பட்ட ஓர் மடலை ஜொள்ளின் இல்லத்திற்கு தபாலில் அனுப்பி வைத்தார். “ஜொள் தவறுதலாக ஒன்றும் செய்யவில்லை, நீங்கள் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை” எனப்படுகின்ற தொனியில், உண்மையில் அதிர்ச்சியில் இருந்த ஜொள்ளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் வகையிலேயே மேற்கண்ட மடல் அனுப்பப்பட்டு இருந்தது.
அரச தலைவர் பற்றீசாவின் செயலாளரிடம் இருந்து அனுப்பப்பட்ட மடலை திறந்து பார்த்த ஜொள்ளின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் சற்று ஆறுதல் அடைந்தாலும், அப்படி ஓர் மடல் அரச தலைவர் பற்றீசாவின் அலுவலகத்தில் இருந்து அவனுக்கு அனுப்பப்பட்டது எனப்படும் விடயத்தை ஜொள்ளிற்கு கூறவில்லை. ஜொள்ளிற்கு அந்த மடலை காட்டினால் அவன் தனது செயற்பாடுகளின் வேகத்தை மேலும் பல மடங்குகள் அதிகரித்துவிடுவான் என்று அவர்கள் தொடர்ந்து அஞ்சினர். இதனால் மேற்கண்ட மடலை ஜொள்ளிற்கு தெரியாமல், அவன் பார்வையில் தென்படாதவாறு இரகசியமாக மறைத்து வைத்து விட்டனர்.
ஜொள் உண்மையில் என்ன செய்கின்றான் எனப்படும் விடயம் அவனது குடும்பத்தினருக்கு பூரணமாக தெரிந்து இருக்கவில்லை. அரச தலைவர் பற்றீசாவுக்கும், கலாநிதி ரசலுக்கும் ஜொள் தொலை நகல்கள் அனுப்புகின்றான் எனப்படும் ஒரு விடயம் மாத்திரமே அவர்களுக்கு தெளிவாக தெரிந்து இருந்தது. திருமணம் செய்து வேறு நாடுகளில் வாழ்ந்த அவனது சகோதரிகள் ஜொள்ளின் செயற்பாடுகளிற்கு அதிகளவில் ஆதரவு கொடுக்க இல்லையாயினும், அவற்றுக்கு எதிர்ப்பு கொடுக்கவில்லை.
தமது சகோதரன் தவறாக ஏதும் செய்யமாட்டான் என்று வேறு நாடுகளில் வாழ்ந்த அவனது சகோதரிகள் உறுதியாக நம்பி இருந்தனர். ஜொள் வீட்டில் குடும்பத்தினருக்கு கொடுக்கின்ற வழமையான பிரச்சனைகள் தவிர, அவன் வெளியாருடன், சமூகத்துடன் மிகவும் கண்ணியத்துடன், அவதானமாக உறவாடுபவன் என்பதை அவர்கள் நன்றாக அறிந்து இருந்தனர்.
ஜொள் பாடசாலையில் சிறுவனாக கற்ற காலத்தில் அவனது ஓர் ஆசிரியர் ஜொள்ளின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிருந்தார். இரண்டு வீடுகளையும் மரப் பலகையினால் உருவாக்கப்பட்ட ஓர் மெல்லிய சுவர் மாத்திரமே பிரித்தது. தினமும் ஜொள் வீட்டில் செய்கின்ற பலவித அட்டகாசங்களை நேரடியாக கண்டறிந்து, துன்புற்ற அவனது ஆசிரியர் பாடசாலையில் ஜொள் மிகவும் பவ்வியமாக, அமைதியாக இருப்பதை கண்டு, அதிர்ச்சியுற்று, “ஜொள் வகுப்பில் பூனைக்குட்டி” என்றும் “வீட்டில் புலிக்குட்டி” என்றும் வெளிப்படையாகவே பலர் முன்னிலையில் நகைச்சுவையாக கூறி வந்தார்.
அதாவது, சிறுவயது தொட்டே ஜொள் தனது சமூகத்துடன் மிகவும் மரியாதையுடன், கண்ணியத்துடன் உறவாடி வந்தான். அப்படிப்பட்டவன் எப்படி, இன்று காந்தருவம் நாட்டில் இத்தனை புதினமான செயற்பாடுகளை செய்துகொண்டு இருக்கின்றான்? அப்படி இருந்தவன் எப்படி திடீரென இப்படி மாறினான்?
அதாவது, காலங்காலமாக சமூகத்தில் ஓர் பவ்வியமான, சாதுவான மனிதனாக வாழ்ந்தவன் எப்படி திடீரென காந்தருவம் நாட்டினையே கலக்கி அடிக்கும் வகையில் இவ்வாறு மாறினான்? பூ எப்படி பூகம்பமாய் மாறியது?
வாழ்க்கையில் ஜொள்ளிற்கு எதிர்பாராமல் ஏற்பட்ட பாரிய அதிர்ச்சிகள் இதற்கு காரணமாக இருக்கலாமா? அவன் காந்தருவம் நாட்டின் வடமுனைவில் வாழ்ந்தபோது தொடர்ச்சியாக எதிர்கொண்ட உளவியல் நெருக்கடிகள் இதற்கு காரணமாக இருக்கலாமா? அப்பாவியான ஜொள்ளிற்கு காந்தருவம் நாட்டு சிறையிலும், காந்தருவம் நாட்டு நீதிமன்றத்திலும் கிடைத்த கசப்பான அனுபவங்கள் இதற்கு காரணமாக இருக்கலாமா? ஜொள்ளிற்கு தனிப்பட்ட வாழ்வில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்விகள், இழப்புக்கள் இதற்கு காரணமாக இருக்கலாமா?
ஏன் அவன் இப்படி சாதாரண மனிதர்கள் போல் அல்லாமல் வினோதமாக செயற்படுகின்றான்? அவனது மூளையில் ஏதாவது பாரிய அதிர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதா?
தெருவில் தலையைக் குனிந்துகொண்டு நடந்தவனுக்கு எப்படி இப்போது பல்லாயிரம் வீரர்கள் குருதி சிந்தி தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த ஓர் விடுதலைப் போராட்ட அமைப்பின் தலைவன் சைமனையே துணிந்து எதிர்க்கின்ற சக்தி கிடைத்தது?
அப்பாவியாக இருந்த காரணத்தினால் காந்தருவம் நாட்டு காவல்துறையினால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டவன் எப்படி இப்போது காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவுக்கே ஆலோசனைகள் கூறக்கூடிய சக்தியை பெற்றான்?
காலங்காலமாக பயபக்தியுடன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டவன் எப்படி இப்போது அந்த ஆலயங்களின் மதபீடாதிபதிகளுக்கே உத்தரவு பிறப்பிக்கக்கூடிய ஓர்மத்தை பெற்றான்?
ஜொள்ளின் செயற்பாடுகளை குறிகாட்டி காந்தருவம் நாட்டில் இருந்து சர்வதேச மொழியில் வெளிவருகின்ற ஓர் பிரபல செய்தியிதழ் குறிப்பிட்ட ஓர் வட்டத்தினருக்கு மட்டும் புரியும்வகையில் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வந்தது. அந்தப்பத்திரிகை ஜொள்ளைப் பற்றி ஒரு தடவை நகைச்சுவையாக இவ்வாறு எழுதியது:
He blamed everyone and everything; even the sun and stars, except himself!
அதாவது, “அவர் அனைவரையும், அனைத்தையும் குறை கூறினார். அவர் அனைவருக்கும், அனைத்திற்கும் கண்டனம் தெரிவித்தார். தனது குறைகூறுதலுக்கும், கண்டனங்களுக்கும் அவர் சூரியன், நட்சத்திரங்கள் இவைகளைக்கூட விட்டு வைக்கவில்லை. ஆனால், அவர் தன்னைப்பற்றி மட்டும் ஒன்றும் குறைகூறவோ, கண்டனம் தெரிவிக்கவோ இல்லை”; இவ்வாறு சொல்லப்பட்டு இருந்தது.
உண்மையில் ஜொள் மனிதரை எதிர்க்கின்றானா அல்லது மனிதரின் தவறான சிந்தனைகளை, மனிதரின் தவறான செயற்பாடுகளை எதிர்க்கின்றானா?
ஜொள்ளின் சிந்தனைகளை பற்றி அறிந்த காந்தருவம் நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஏறக்குறைய இவ்வாறு தனது தனிப்பட்ட கருத்தை கூறி இருந்தார்:
We have to do the right things, not something that makes pleasure!
நாங்கள் சரியான காரியங்களை செய்யவேண்டுமேயொழிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் காரியங்களை அல்ல எனப்படும் அர்த்தத்தில் அவரது கூற்று காணப்பட்டது. அவ்வாறாயின், மதிப்புக்குரிய நீதிபதியிடம் ஜொள் வினவுகின்ற விடயம் யாதாக இருக்கலாம்?
What are the right things? What is the purpose of Human life?
சரியான காரியங்கள் எனப்படுபவை எவை? மனித வாழ்வின் நோக்கம் என்ன?
எலிகள் தப்பிப் பிழைப்பதற்கு, அவற்றை கொல்கின்ற பூனையின் கழுத்தில் ஓர் எலி துணிந்து வந்து மணி கட்டவேண்டும். மனிதராகிய எலிகளின் வாழ்வு “புத்திக்கூர்மை பொறி – Intelligent Trap” எனப்படுகின்ற பூனையினால் சின்னாபின்னமாவதை தடுப்பதற்கு ஜொள் எனப்படுகின்ற எலி தயாராகிவிட்டதா? “புத்திக்கூர்மை பொறி – Intelligent Trap” எனப்படுகின்ற பூனையின் கழுத்தில் மணி கட்டும் முயற்சியில் ஜொள் எனப்படும் எலி வெற்றி பெறுமா?
J Zero L Org