பல வருடங்களாக மாறுபட்ட கற்பனை உலகங்களை தரிசித்துக் கொண்டு இருந்த ஜொள், இறுதியாக யதார்த்த உலகில் தனது அறிவியல் கண்டறிதல்களை மேற்கொள்வதற்கு, யதார்த்த உலகில் தனது அறிவியல் கண்டறிதல்களை பிரயோகம் செய்வதற்கு, வழி சமைத்து கொடுத்த பாதையை திறப்பதற்குரிய “இரகசிய கடவுச்சொல்லாக” – A Secret Password, பேரறிவு பூட்டை திறப்பதற்குரிய “சாவியாக” – A Key to unlock the Wisdom, அவன் வாசித்த ஓர் ஆன்மீக நூலின் பின் அட்டையில் காணப்பட்ட கீழ்வரும் வாக்கியம் விளங்கியது:
You, you as an individual, has the capability, has the capacity, has everything to achieve anything. Knowledge is not in the books. It is not a theory, not a philosophy, but a practical experience itself!
அதாவது, “ஞானம் நூல்களில் இல்லை. ஞானம் என்பது ஓர் கொள்கை அல்ல, ஞானம் என்பது ஓர் கோட்பாடு அல்ல. ஞானம் என்பது ஓர் நடைமுறை வாழ்வியல் அனுபவம்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், “தனி நபராகிய உனக்குள்ளேயே எதையும் அடைவதற்கு தேவையான ஆற்றல், தகமை எல்லாம் அடங்கியுள்ளது” என்றும் சொல்லபட்டு இருந்தது.
மீண்டும், மீண்டும், மீண்டும் இந்தப் பொன்மொழியை ஜொள் பல்வேறு கோணங்களில் சிந்திக்கத் தொடங்கினான். பின்னர் நடைபெற்றது என்ன?
ஜொள் இதை வாசித்து, அதன் உண்மைப் பொருளை உணர்ந்த தருணத்தில் அவன் வாழ்வில் நடைபெற்றது என்ன?
எரிபொருள் நிரப்பப்பட்ட கொள்கலன் ஒன்றினுள் எறியப்பட்ட “தீக்குச்சி” போல, விண்ணுக்கு செலுத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த விண்கலத்தினை ஏவுவதற்கு கொடுக்கப்படுகின்ற “இறுதிக் கட்டளையாக” ஜொள் வாழ்வில் மேற்கண்ட “பொன்மொழி” – Golden Words முக்கியத்துவம் பெற்றது.
இப்போது, ஜொள்ளின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. சிற்றறிவுக்கு பதிலாக பேரறிவு ஜொள்ளினை வழிநடாத்தத் தொடங்கியது. ஜொள்ளின் சிற்றறிவை அவனது பேரறிவு கட்டுப்படுத்தத் தொடங்கியது.
திடீரென, தனது சிந்தனைகளை குறித்து வைக்கின்ற மூன்று, நான்கு இரகசிய அந்தரங்க கையேடுகளை ஜொள் காந்தருவம் நாட்டு தலைநகரில் இருந்த ஓர் பிரபல பல்கலைக்கழகத்தின் பேராசிரியருக்கு முகவரியிட்டு அனுப்பினான். கடிதத்தில் பேராசிரியருக்கு ஓர் சிறுகுறிப்பையும் கிட்டத்தட்ட இவ்வாறு எழுதியிருந்தான்:
எனது தனிப்பட்ட தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தக்கையேடுகள் நீண்ட காலமாக பயனின்றி கிடக்கின்றன. உங்கள் ஆராய்ச்சிகளுக்கு உதவக்கூடும் என்பதனால் இவற்றை குப்பையில் எறியாமல் உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன்.
ஜொள் தெருவில் நடக்கத் தொடங்கினான். ஓர் எரிபொருள் விற்பனை நிலையத்தின் அருகாக ஓர் மிகப்பெரிய விளம்பரப் பலகை ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அதில் ஓர் ஓவியன் இவ்வாறு ஓர் வாக்கியத்தை எழுதி, அதற்கு நிறம் தீட்டத் தொடங்கினான்:
You can beat the World!
காலம் காலமாக கண்களை மூடித் தியானித்து கற்பனை உலகினில் திளைத்து இருந்தவன், இப்போது கண்களை முற்றிலுமாகத் திறந்து தன்னைச் சுற்றிலும் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களையும் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினான்.
உலகின் ஒவ்வொரு அசைவுகளும், சடப்பொருட்களின் ஒவ்வொரு அசைவுகளும் தனக்கு சார்பாக இயங்குவதை அவன் கண்டறிந்தான். அதாவது, உலகின் ஒவ்வொரு இயக்கத்தையும், சடப்பொருட்களின் ஒவ்வொரு அசைவுகளையும் தனிமனிதர்கள் தங்களுக்கு சார்பாக மாற்றிக்கொள்ள முடியும் என்கின்ற உண்மையை ஜொள் கண்டறிந்தான்.
குழப்பமாக இருக்கின்றதா? சரி, இதை இவ்வாறும் விளக்கலாம்:
உங்களுக்கு திடீரென்று சுகவீனம் ஏற்படுகின்றது. வைத்தியரிடம் செல்ல வேண்டும். அப்போது, ஆச்சரியப்படும் வகையில் உங்களுக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வருகின்றது. மறுமுனையில் உங்கள் குடும்ப வைத்தியர் ஏதோ ஓர் தேவைக்காக உங்களை தொலைபேசியூடாக அழைக்கின்றார்.
உங்களிடம் கையில் பணம் இல்லை. ஏதோ ஒரு தேவைக்காக உங்களுக்கு பணம் தேவைப்படுகின்றது. அப்போது, ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து தபால் மூலமாக உங்களுக்கு பணம் அனுப்பி வைக்கின்றார்.
உங்களுக்கு ஓர் நிகழ்விற்கு செல்வதற்கு பிரத்தியேகமான ஓர் உடை தேவைப்படுகின்றது. உடையை வாங்குவதற்கு உங்கள் கையில் பணம் இல்லை. ஆச்சரியப்படும் வகையில் உங்கள் உறவினர் ஒருவர் உங்களுக்கு தேவைப்படுகின்ற அந்த பிரத்தியேக உடையை வாங்கிக்கொண்டு, அதை உங்களுக்கு அன்பளிப்பாக தருவதற்கு உங்கள் இல்லத்திற்கு வருகின்றார்.
ஜொள் கண்டறிந்த “சார்பு உலகத்தில்” மேற்கண்ட விடயங்கள் ஒரு சில பகுதிகள் மட்டுமே. இவ்வாறே நடைமுறை வாழ்வில் மனிதர்கள் தவிரவும், சடப்பொருட்களின் தோற்றங்களையும், அசைவுகளையும் தனிநபர்கள் தமக்கு சார்பாக இயங்குகின்ற செயற்பாடுகளாக மாற்றிக்கொள்ள முடியும் என்கின்ற உண்மையையும் ஜொள் கண்டறிந்தான்.
குழப்பமாக இருக்கின்றதா? சரி, இதை தொடர்ந்து இவ்வாறும் விளக்கலாம்:
நீங்கள் ஒருவரை காதல் செய்கின்றீர்கள். முதல் தடவையாக உங்கள் காதலை அவரிடம் கூறப்போகின்றீர்கள். நீங்கள் உங்கள் காதலை அவரிடம் தெரிவிக்கும் கணத்தில் திடீரென ஓர் அழகிய வானவில் ஆகாயத்தில் தோன்றுகின்றது.
நீங்கள் ஓர் நல்ல காரியத்தை அனாதை குழந்தைகளுக்கு செய்யப்போகின்றீர்கள். நீங்கள் அனாதைக் குழந்தைகளுக்கு அந்த நல்ல காரியத்தை செய்வதற்காக வீட்டில் இருந்து புறப்படும்போது, ஈரப்பதன் அற்று இருந்த நீங்கள் வாழும் சூழல் திடீரென மாற்றம் அடைந்து, உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மழை பொழிகின்றது.
நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பாடுகின்றீர்கள், நடனம் ஆடுகின்றீர்கள். அப்போது, திடீரென உங்கள் மகிழ்ச்சியில் இயற்கையும் இணைந்து கொள்கின்றது. பல்வேறு தாளக் கட்டுக்களுடன் இடி இடிக்கின்றது, மின்னல் மின்னுகின்றது, மழை பொழிகின்றது. நீங்கள் – உங்கள் உடல் அசைகின்ற வேகம் அதிகரிக்க, அதிகரிக்க மழை பொழிகின்ற வேகமும் அதிகரிக்கின்றது. நீங்கள் கைகளால் மேலும், மேலும் உரத்து தட்டும்போது இடி இடிக்கின்ற வேகமும், சத்தமும் மேலும், மேலும் அதிகரிக்கின்றன.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஓர் பரீட்சையை வெற்றிகரமாக செய்துவிட்டு வருகின்றீர்கள். நீங்கள் பரீட்சைக்கு சென்ற விடயமோ அல்லது அதில் வெற்றி பெற்ற விடயமோ ஒருவருக்கும் தெரியாது. ஆனால், உங்கள் வீட்டுக்கு அருகில் திடீரென்று ஓர் புதிய விளம்பரப் பலகை தோன்றியுள்ளது. அதில் இவ்வாறு எழுதப்பட்ட ஓர் விளம்பரம் காணப்படுகின்றது:
Congratulations! You hit the Target!
கலாநிதி ரசலுக்கு தனது அறிவியல் கண்டறிதல்களை விபரித்து அனுப்பிய ஓர் மடலில் ஜொள் ஏறக்குறைய இவ்வாறு எழுதியிருந்தான்:
The world is functioning under a certain system. Imaginary ideas and formulas help us to figure out this system. If we understand how the system works, we can turn the whole world really functioning for us!
அதாவது, “ஓர் குறிப்பிட்ட ஒழுங்குமுறைக்கு கட்டுப்பட்டே இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. கற்பனை சிந்தனைகளும், சூத்திரங்களும் நாங்கள் சஞ்சாரம் செய்கின்ற இந்தப் பிரபஞ்சம் இயங்கும் ஒழுங்குமுறையினை கண்டறிவதற்கு உதவியாக இருக்கின்றன. “பிரபஞ்சம் எதன் அடிப்படையில் இயங்குகின்றது” என்கின்ற ஒழுங்கு முறையை நாங்கள் கண்டறிந்து விட்டோம் என்றால், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுகளையும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் நாங்கள் எங்களுக்கு சார்பாக மாற்றிக்கொள்ள முடியும்”; இவ்வாறு ஜொள் கலாநிதி ரசலுக்கு தெரிவித்து இருந்தான்.
உலகில் காலம், காலமாக தோன்றிய அறிஞர்கள், ஞானிகள், யோகிகள், சித்தர்கள் மேற்கண்ட சார்பு உலகத்தை “அனுபவ ரீதியாக” உணர்ந்து வைத்து இருந்தார்கள். ஆனால், அதை அவர்கள் யாராவது அறிவியல் ரீதியாக நிரூபித்து இருந்தார்களா என்று ஜொள்ளிற்கு தெரியவில்லை. மேற்கண்ட சார்பு உலகத்தை தன்னால் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியும் என்று ஜொள் உறுதியாக நம்பினான். சார்பு உலகத்தை அறிவியல் ரீதியாக நிரூபிக்கும் வகையில் பலவித கற்பனை சூத்திரங்கள், தத்துவங்களை கலாநிதி ரசலுக்கு ஜொள் தனது மடல்களில் எழுதி அனுப்பினான்.
அவ்வாறாயின், ஜொள் சார்பு உலகத்தை தற்போது அறிவியல் ரீதியாக நிரூபித்துக்கொண்டு இருக்கின்றானா? ஜொள் விபரிக்கின்ற கற்பனை சூத்திரங்கள், சிந்தனைகளின் அடிப்படையில் மற்றவர்களினாலும் சார்பு உலகத்தை தரிசிப்பது சாத்தியமா? ஓர் மனிதன் சார்பு உலகத்தை உணர்வதற்கு தேவையான பேரறிவை பெறுவது எவ்வாறு? பேரறிவும், சிற்றறிவும் ஒன்றுடன் ஒன்று சமநிலை அடைந்து செயற்படுவது எவ்வாறு?
சார்பு உலகத்தினை மனித குலம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு எவ்விதத்தில் சாதகமான வகைகளில் பயன்படுத்தமுடியும்? சார்பு உலக கோட்பாட்டின் ஒழுங்கு முறைக்கு உட்பட்டு இயங்கியே ஜொள் தற்போது காந்தருவம் நாட்டினை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கின்றானா? சார்பு உலகம் என்பது வெறும் பிரமையா? அவ்வாறாயின், எவ்வாறு ஜொள்ளினால் பலவித தத்துவங்களை விபரிக்க முடிகின்றது? அவனது தத்துவங்களும் சார்பு உலகம் போல் வெறும் பிரமையா?
தனது அறிவியல் கண்டறிதலை மேற்கொண்ட சமயம் ஜொள் தனது தாய்மொழியில் நகைச்சுவையாக ஓர் கவிதையை எழுதி காந்தருவம் நாட்டில் இருந்து வெளிவருகின்ற ஓர் பிரபல நாளிதழுக்கு அனுப்பி இருந்தான். அந்த நீண்ட கவிதையின் ஓர் பகுதி ஏறக்குறைய இவ்வாறு இருந்தது:
எடுவை: அன்பு
தொடுவை: சந்தோசம்
+++
தனிநாடு கிடைப்பதற்கு
வழியொன்று நான் சொல்வேன்!
தடிப்பயலே உனக்குள்ளே
இருக்கிறது தனிநாடு!
அன்பே! ஆருயிரே!
அணைக்கின்றேன் முத்தமிடு!
தென்றலே! தேனே! தெய்வமே நீயே!
போகின்றாய்.. வருகின்றாய்..
வருகின்றாய்.. போகின்றாய்..
தென்றல் தான் தென்றல் என்று
உணர்வது எப்போது?
J Zero L Org