முறைப்படி பார்த்தால், ஜொள் காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவுக்கு எதிராக இயங்கி இருக்கவேண்டும். அதேசமயம், அவன் விடுதலைப் போராளி சைமனுக்கு ஆதரவு கொடுத்து இருக்க வேண்டும். ஏனெனில், ஜொள் காந்தருவம் நாட்டின் வடமுனைவில் வாழ்ந்த காலத்தில், அரச தலைவர் பற்றீசாவின் ஆட்சியில், கொடூரமான அனுபவங்களை பெற்றான். தனது சொந்த ஊரில் இருந்து காந்தருவம் நாட்டு முப்படைகளின் தாக்குதல்கள் காரணமாக ஏதிலியாக விரட்டி அடிக்கப்பட்டு இருந்தான். காந்தருவம் நாட்டு முப்படைகளின் மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் காரணமாக அவன் வாழ்வில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தான்.
பல தடவைகள் காந்தருவம் நாட்டின் முப்படைகளின் தாக்குதல்களில் இருந்து அப்பாவியான ஜொள் தெய்வாதீனமாக உயிர் தப்பினான். தவிர, காந்தருவம் நாட்டின் தலை நகரில் விடுதலைப் போராளி சைமன் நடாத்திய மிகப்பெரிய ஓர் குண்டு வெடிப்பு தாக்குதலில் அப்பாவியான ஜொள் “தீவிரவாத சந்தேக நபராக” சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். காந்தருவம் நாட்டு சிறையில் அவன் கொடூரமான அனுபவங்களை பெற்றான். அப்பாவியான அவன் காந்தருவம் நாட்டு நீதி மன்றத்தினாலும், காந்தருவம் நாட்டு காவல் துறையினராலும் பலவித இம்சைகளுக்கு உள்ளாகி இருந்தான். ஜொள் குற்றம் அற்றவன் என்று கூறப்பட்டு, காந்தருவம் நாட்டு நீதி மன்றத்தின் பிடியில் இருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படுவதற்கு சுமார் ஒன்று அரை வருடங்கள் எடுத்தது.
ஆயினும், ஜொள் விடுதலைப் போராளி சைமனுக்கு ஆதரவாக இயங்கவில்லை. ஏன்?
ஜொள் மிக இளம் வயதிலேயே தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டமையால், அவனால் பிரச்சனைகளையும், துன்பங்களையும் குறுகிய நோக்கில் பார்க்க முடியவில்லை. தன்னை ஓர் குறிப்பிட்ட இனம், மதம், மொழியினுள் அடையாளப்படுத்தி குறுகிய வட்டத்தில் சிந்திக்காது, அனைவருக்கும் பொதுவான “பரந்த பார்வையில்” சிந்தித்து, செயற்படுவதையே ஜொள் விரும்பினான். பரந்த பார்வையில் சிந்திக்கும்போது மட்டுமே வாழ்வில் உண்மையினை தரிசனம் செய்ய முடியும் என அவன் உறுதியாக நம்பினான். பரந்த பார்வையில் சிந்தித்து செயற்படும்போது மட்டுமே இயற்கையின் பின்னால் – மனித வாழ்வின் பின்னால் புதைந்துள்ள இரகசியங்களை கண்டறிய முடியும் என அவன் நம்பினான்.
தனது வாழ்வில் இரண்டு தடவைகள் மட்டுமே ஜொள் விடுதலைப் போராளி சைமனின் விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்ளக்கூடிய நிலமைக்கு மிகவும் அருகாக சென்று இருந்தான். முதல் தடவை அவன் விடுதலை இயக்கத்தில் இணைய முடியாது சென்றமைக்கு அவனது “வயதும்”, இரண்டாவது தடவை அவன் விடுதலை இயக்கத்தில் இணைய முடியாது சென்றமைக்கு – இறுதி நேரத்தில் அவன் தனது முடிவை மாற்றியமைத்தமைக்கு, அவனது “தத்துவ ஆராய்ச்சிகளும்” காரணமாக அமைந்தன.
காந்தருவம் நாட்டு முப்படைகள் மூலம் ஜொள்ளின் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் கொல்லப் பட்டார்கள், காயப் படுத்தப்பட்டார்கள், மிகுந்த துயர் அடைந்தார்கள். ஆயினும், ஜொள்ளினால் காந்தருவம் நாட்டு முப்படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட முடியவில்லை. தனது ஆற்றல்கள் மூலம் கொல்லப்படக்கூடிய காந்தருவம் நாட்டு முப்படை வீரர்களின் உறவினர்களின் நிலமையை அவன் சிந்தித்து பார்த்தான்.
தனது ஆற்றல்கள் மூலம் – வேற்று இனத்தவர்களாக, மதத்தவர்களாக, மொழியை பேசுபவர்களாக இருப்பினும், காந்தருவம் நாட்டு முப்படை வீரர்களின் குழந்தைகளை அனாதைகளாக்க அவன் விரும்பவில்லை. தனது ஆற்றல்கள் மூலம் வேற்று இனத்தவர்களாக, மதத்தவர்களாக, மொழியை பேசுபவர்களாக இருப்பினும், காந்தருவம் நாட்டு முப்படை வீரர்களின் வாழ்க்கைத் துணைகளை விதவைகளாக்க அவன் விரும்பவில்லை. ஜொள் விடுதலைப் போராளி சைமனின் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து இயங்குவதற்கு இவ்வாறான சிந்தனையே ஒரேயொரு தடைக்கல்லாக அமைந்தது.
ஜொள் ஒரு தடவை மாத்திரமே தனது வாழ்வில் விடுதலைப் போராளி சைமனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து இருக்கின்றான். இவ்வாறே, ஜொள் ஒரு தடவை மாத்திரமே தனது வாழ்வில் விடுதலைப் போராளி சைமனுக்கு மடல் அனுப்பி இருக்கின்றான்.
காந்தருவம் நாட்டின் வட முனைவில் வாழ்ந்தபோது – ஜொள் தீவிர தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில், ஒரு தடவை விடுதலைப் போராளி சைமனுக்கு “சுதந்திர தனிநாடு” சம்மந்தமாக, அதன் நிருவாக கட்டமைப்புக்கள், பொருளாதார கட்டமைப்புக்கள் பற்றி தத்துவ ஆராய்ச்சிகள் செய்து, அவற்றை அரச தலைவர் பற்றீசாவுக்கு அனுப்பியது போல மடல்களாக வரைந்து அனுப்ப ஜொள் விரும்பி இருந்தான்.
விடுதலைப் போராளி சைமனின் விடுதலை இயக்கத்தின் பல நடவடிக்கைகள் ஜொள்ளிற்கு கசப்பை ஏற்படுத்தி இருந்தன. ஓர் தடவை ஜொள்ளும், அவனது பாடசாலை நண்பர்களும் விடுதலைப் போராளி சைமனின் “நிருவாகக் கட்டமைப்பின்” ஓர் அங்கமாக திகழ்ந்த காவல்துறை மூலம் தேவையற்ற விதத்தில் ஓர் பிரச்சனையில் சம்மந்தப்படுத்தப்பட்டு, உளவியல் ரீதியாக அச்சுறுத்தல் செய்யப்பட்டு இருந்தனர்.
ஜொள் சுதந்திரமாக துவிச்சக்கர வண்டியில் பயணித்து, இயற்கையை இரசித்துக்கொண்டு, தத்துவ ஆராய்ச்சிகள் செய்வதை பொழுது போக்காக கொண்டு இருந்தான். சைமனின் விடுதலை இயக்கத்தின் போராளிகள் ஜொள்ளின் சுதந்திரமான நடமாட்டத்தை சந்தேக கண்ணுடன் நோக்கி, அவனுக்கு உளவியல் ரீதியாக அச்சுறுத்தல் செய்து இருந்தனர்.
மேற்கண்ட காரணங்களினால் விடுதலைப் போராளி சைமனுக்கு ஜொள் “சுதந்திர தனிநாடு” சம்மந்தமாக, அதன் நிருவாக கட்டமைப்புகள், பொருளாதார கட்டமைப்புக்கள் பற்றிய தத்துவ ஆராய்ச்சிகளை செய்து அனுப்ப முடியவில்லை.
ஒரே ஒரு தடவை மட்டும் ஜொள் விடுதலைப் போராளி சைமனுக்கு ஓர் மடல் அனுப்பி இருந்தான். சைமனின் விடுதலைப் போராட்ட அமைப்பு குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள், யுவதிகள் சுதந்திரமாக காந்தருவம் நாட்டு அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்கு தடை விதித்து இருந்தது. தன்னை காந்தருவம் நாட்டின் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு கோரி ஜொள் விடுதலைப் போராளி சைமனுக்கு நேரடி மடல் ஒன்று வரைந்து அனுப்பி இருந்தான். தனது “உடல் உபாதைகளை” காந்தருவம் நாட்டு அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு தான் செல்ல விரும்புவதற்குரிய முக்கிய காரணமாக அவன் கூறி இருந்தான். ஜொள் தனது இரண்டு புகைப்படங்களையும் விடுதலைப் போராளி சைமனுக்கு அனுப்பிய மடலில் இணைத்து இருந்தான்.
அரச தலைவர் பற்றீசாவுக்கு ஜொள் அனுப்பிய தத்துவ ஆராய்ச்சிகள் அனைத்தும் அறிவியல், வாழ்வியல், அரசியல், முக்கியமாக காந்தருவம் நாட்டில் நிரந்தர அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது சம்மந்தமாக மட்டுமே அமைந்து இருந்தன. அவன் போரியல், வன்முறைகளை கட்டுப்படுத்துவது சம்மந்தமாக எதுவித தகவல்களையும் அரச தலைவர் பற்றீசாவுக்கு அப்போது அனுப்பவில்லை. ஆனால், அவனது பேரறிவு ஏன் திடீரென விடுதலைப் போராளி சைமனுக்கு எதிராக தனது தத்துவ ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கியது?
அரச தலைவர் பற்றீசாவுடன் தொலைநகல்கள் ஊடாக தொடர்புகொண்டு தனது சிந்தனைகளை பரிமாற்றம் செய்துகொண்டிருந்தபோது, விடுதலைப் போராளி சைமனின் விடுதலை அமைப்பு மிகப்பெரியதொரு குண்டு வெடிப்பு தாக்குதலை காந்தருவம் நாட்டின் தலைநகரில் நிகழ்த்தியது. ஏற்கனவே பல்வேறு விடயங்களை அறிவியல் ரீதியாக மின்னல் வேகத்தில் பகிர்ந்து கொண்டு இருந்த ஜொள், இந்தக்குண்டு வெடிப்பு காரணமாக கடும் அதிர்ச்சி அடைந்தான்.
குண்டு வெடித்த கணத்தில் இருந்து ஜொள்ளின் பேரறிவு திடீரென தனது திசையை மாற்றிக்கொண்டது. காந்தருவம் நாட்டில் குண்டுவெடிப்புக்கள் தொடர்ச்சியாக நிகழப்போவதை அது உணர்ந்துகொண்டது. உடனடியாகவே வன்முறைகளை தடுக்கவேண்டும் என ஜொள்ளின் பேரறிவு நினைத்தது. அந்தக்கணம் தொடக்கம், வன்முறைகளை கட்டுப்படுத்துவது சம்மந்தமாக தூய தத்துவ ஆராய்ச்சிகளை செய்து அரச தலைவர் பற்றீசாவுக்கு அனுப்பத் தொடங்கியது. வன்முறைகள் பற்றிய தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டபோது, ஒரு கட்டத்தில் விடுதலைப் போராளி சைமனின் நடவடிக்கைகளுக்கு எதிராக – அதை முறியடிக்கும் வகையில் சிந்திக்கவேண்டிய முக்கிய தேவை ஜொள்ளிற்கு ஏற்பட்டது.
ஜொள்ளின் பேரறிவை பொறுத்தளவில் விடுதலைப் போராளி சைமனின் செயற்பாடுகளில் – அவரது தீவிரவாத நடவடிக்கைகள் மாத்திரமே மிகவும் தவறாக தென்பட்டது. விடுதலைப் போராளி சைமன் மூலம் உருவாகக்கூடிய வன்முறைகளினால் காந்தருவம் நாட்டிற்கு பாரிய ஆபத்து இருப்பதை ஜொள்ளின் பேரறிவு உணர்ந்து கொண்டது. இதனாலேயே அது விடுதலைப் போராளி சைமன் மூலம் காந்தருவம் நாட்டு மக்களிற்கு ஏற்படக்கூடிய உயிர், உடமை இழப்புக்களை தடுப்பதற்காக தூய தத்துவ ஆராய்ச்சிகளில் இறங்கியது.
அரச தலைவர் பற்றீசாவுக்கு ஜொள் முன்மொழிந்த “அரசியல் அதிகார பகிர்வு திட்டத்தில்” – “Devolution Package”, விடுதலைப் போராளி சைமனுக்கு காந்தருவம் நாட்டின் முப்படைகளையும் கட்டுப்படுத்தும் பதவியினை [ Chief of Staff ] கொடுக்குமாறு ஜொள் பிரேரணை செய்து இருந்தான். விடுதலைப் போராளி சைமனின் ஆற்றல்களை காந்தருவம் நாட்டிற்கு சாதகமான முறைகளில் பயன்படுத்தும் அதே சமயம், “அரசியல் அதிகார பகிர்வு திட்டம்” மூலம் காந்தருவம் நாட்டின் இனப்பூசலை அமைதியாக தீர்க்கமுடியும் என்றும் ஜொள் உறுதியாக நம்பினான். விடுதலைப் போராளி சைமன் காந்தருவம் நாட்டின் காட்டுப்பகுதியில் ஓர் குடியிருப்பை அமைத்து, அங்கு நிரந்தரமாக வாழ்ந்துகொண்டு காந்தருவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவமுடியும் என்றும் ஜொள் உறுதியாக நம்பினான்.
விடுதலைப் போராளி சைமன் பற்றிய தகவல்களை தூய தத்துவ ஆராய்ச்சிகள் மூலம் அரச தலைவர் பற்றீசாவுக்கு வழங்கியிருந்த அதே சமயம், பிரேரணை செய்யப்படுகின்ற சிந்தனைகள் உடனடியாக நடைமுறை செய்யப்படாவிட்டால் காந்தருவம் நாட்டிற்கு எதிர்காலத்தில் பாரிய அழிவுகள் ஏற்படும் என்பதையும் ஜொள் எச்சரித்து இருந்தான். தூய சிந்தனையுடன் – Honesty – பிரச்சனைகள் அணுகப்பட்டு, தீர்க்கப்படாவிட்டால் காந்தருவம் நாட்டின் வட, தென் முனைவுகளில் வாழ்கின்ற மக்கள் மிகப்பெரிய அவலங்களை சந்திப்பார்கள் என்று கடுமையாக எச்சரித்து இருந்தான்.
விடுதலைப் போராளி சைமனுடன் ஒப்பிடும்போது, அரச தலைவர் பற்றீசா நியாயமான – நடுநிலையான ஓர் நபராக – Reasonable Person – ஜொள்ளின் பேரறிவுக்கு தென்பட்டார். அரச தலைவர் பற்றீசாவுக்கு தனிப்பட இருக்கக்கூடிய அழுத்தங்கள் தவிர, அவருடன் சேர்ந்து செயற்பட்டு காந்தருவம் நாட்டின் இனப்பூசலை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்று ஜொள் கருதினான். தனது சிந்தனைகளிற்கு அரச அதிபர் பற்றீசா செயல் வடிவம் கொடுப்பது, கொடுக்காதது ஒருபுறம் இருக்க, அவற்றை “நன்கு காது கொடுத்து கேட்கக்கூடிய” ஓர் நபராகவும் அரச தலைவர் பற்றீசாவை ஜொள்ளின் பேரறிவு இனம் கண்டு கொண்டது. இதனாலேயே, அரச தலைவர் பற்றீசாவுக்கு எதிராக ஜொள்ளின் பேரறிவு செயற்படவில்லை.
சரி, இப்போது மீண்டும் ஜொள்ளின் நடவடிக்கைகளை மீள்பரிசீலனை செய்வோம். ஜொள் உண்மையில் காந்தருவம் நாட்டில் தற்போது என்ன செய்கின்றான்? அவன் ஓர் முழுப் பைத்தியமா? ஒரு புறம், கலாநிதி ரசலுடன் தத்துவ ஆராய்ச்சிகள் செய்து, விவாதம் செய்து கொண்டு இருக்கின்றான். மறுபுறம், அரச தலைவர் பற்றீசாவுடன் காந்தருவம் நாட்டின் எதிர்காலம் சம்மந்தமாக கருத்துப் பரிமாற்றங்கள் செய்கின்றான். அத்துடன், விடுதலைப் போராளி சைமனின் வன்முறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது சம்மந்தமாகவும் தூய தத்துவ ஆராய்ச்சிகள் செய்கின்றான். இவற்றுடன், வெவ்வேறு சமய தலங்களிற்கும் சென்று, அங்கும் தத்துவ விசாரணைகள் செய்து இருக்கின்றான். இவையெல்லாம் ஒரு தனிநபர் மூலம் – ஒரு மனிதன் மூலம் ஏக காலத்தில் செய்யப்படுவது எப்படி சாத்தியம்? ஜொள்ளிற்கு புத்தி நன்றாக பேதலித்து விட்டதா? அல்லது, இங்கு வேறு ஏதோ விடயம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றதா?
எது எப்படியிருப்பினும், அரச தலைவர் பற்றீசாவுக்கு ஜொள் முன்மொழிந்த காந்தருவம் நாட்டிற்கான “அரசியல் அதிகார பகிர்வு திட்டம்” – “Devolution Package” எதன் அடிப்படையில், எவ்வாறு உருவாக்கப்பட்டு இருந்தது? அவனது அதிகார பகிர்வு திட்டம் நடைமுறைச் சாத்தியமானதா? அல்லது, வெறும் தத்துவ ஆராய்ச்சியாக – வெற்று கடதாசியில் மட்டும் படித்து மகிழக்கூடிய ஒன்றா?
J Zero L Org