கலாநிதி ரசலுடன், அவர் அலுவலகத்தில் ஜொள் மீண்டும் தொலைபேசியூடாக உரையாடத் தொடங்கினான். இப்போது தனது வாழ்க்கையில் இரண்டாவது தடவையாக ஜொள் கலாநிதி ரசலுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொள்கின்றான். இன்னமும் அவன் கலாநிதி ரசலை நேரடியாக சந்திக்கவில்லை. கடந்த தினத்திற்கு முந்தினம் கலாநிதி ரசல் ஜொள்ளிற்கு “தான் சுகவீனமாய் இருப்பதாகவும், ஜொள்ளின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்” எனவும் எழுதப்பட்ட மடலை கொடுத்து இருந்தார். கலாநிதி ரசலுடனான ஜொள்ளின் இரண்டாவது உரையாடல் இவ்வாறு இருந்தது:
ஜொள்: Sir, Can I meet you?
கலாநிதி ரசல்: Yes, I come up! [பின்னர் திடீர் அமைதி, சுயநினைவை இழக்கின்றார்]
கலாநிதி ரசலின் செயலாளர்கள் மிகுந்த பதற்றத்துடன் ஜொள் நிற்கின்ற அலுவலகத்தின் கீழ்மாடி பகுதியை நோக்கி விரைவாக ஓடி வருகின்றார்கள். கலாநிதி ரசலின் ஓர் செயலாளர் ஜொள்ளுடன் மிகவும் பீதியுடன் தொலைபேசியூடாக உரையாடுகின்றார். கலாநிதி ரசல் திடீரென சுகவீனம் அடைந்துவிட்டதாக பதற்றத்துடன் கூறுகின்றார். இதே சம்பவம் இரண்டாவது தடவையாக நடைபெறுகின்றது. ஜொள் கலாநிதி ரசலுடன் உரையாட முயற்சி செய்யும்போது கலாநிதி ரசல் உடனடியாக சுயநினைவை இழக்கின்றார். ஏன்?
ஜொள் ஒருவருடன் உரையாடும்போது சுயநினைவை இழக்க வைக்கக்கூடிய நுட்பம் எதையாவது தனது தத்துவ ஆராய்ச்சிகள் மூலம் உளவியல் ரீதியாக கற்று, உணர்ந்து, அந்த நுட்பத்தை அவன் கலாநிதி ரசல் மீது பிரயோகம் செய்கின்றானா? அவன் தன்னை ஓர் பிரயோக / கல்விசார் மனவியலாளன் என்று ஏற்கனவே கூறி இருக்கின்றான். ஜொள் இரகசிய மந்திர, தந்திர வித்தைகள், வர்மக் கலைகள் ஏதாவது அறிந்தவனா? அல்லது வேறு ஏதாவது காரணமா?
கலாநிதி ரசல் ஜொள்ளை கண்டு அச்சம் அடைகின்றாரா? கலாநிதி ரசல் திடீர் ஆச்சரிய உணர்வு காரணமாக சுயநினைவு இழக்கின்றாரா? கலாநிதி ரசலின் இல்லத்திற்கு செல்ல முன்னரே, மூன்று சமய தலங்களில் ஜொள் தனது அறிவியல் கண்டறிதல் பற்றிய ஆவணக்கோப்பை சமர்ப்பித்து இருந்தான். அந்தச் செய்தி ஏற்கனவே கலாநிதி ரசலின் காதுகளுக்கு சென்று இருப்பதனால் அதை எழுதிய நபர் தன்னுடன் நேரடியாக உரையாடுவதை எண்ணி, அந்த ஆச்சரியத்தில் [Excited] கலாநிதி ரசல் சுயநினைவு இழக்கின்றாரா? ஜொள்ளுடன் உரையாடும்போது கலாநிதி ரசல் சுயநினைவு இழப்பதற்கு காரணம் யாதாக இருக்கலாம்?
கலாநிதி ரசல் சர்வதேச மொழியில் அறுபத்து ஐந்துக்கும் மேற்பட்ட, உலகப் பிரபலம் பெற்ற விஞ்ஞான புனைகதை நூல்களையும், ஏராளம் விஞ்ஞான கட்டுரைகளையும் எழுதியவர். சர்வதேச மொழியே அவரது தாய்மொழி! அப்படிப்பட்டவர் ஏன் ஜொள் “Sir, Can I meet you?” என்று கேட்டபோது, “Yes, I come up!” என்று கூறினார்?
கலாநிதி ரசல் அவர்கள் அவரது அலுவலகத்து மேல்மாடி அறையில் இருக்கின்றார். ஜொள் அலுவலக கீழ்மாடியில் விருந்தினர் பகுதியில் நிற்கின்றான். அவ்வாறாயின், கலாநிதி ரசல் ஜொள்ளிடம் இவ்வாறு “Yes, you come up!” அல்லது “Yes, I come down!” என்று கூறியிருக்க வேண்டும். ஆனால், “Yes, I come up!” என்று கூறுகின்றார். கலாநிதி ரசலுக்கு என்ன மூளை மாறாட்டமா? அல்லது இங்கு வேறு ஓர் விடயம் நடைபெறுகின்றதா? அந்த விடயம் என்னவாக இருக்கலாம்? கலாநிதி ரசலின் பேரறிவு இங்கு ஜொள்ளின் பேரறிவுக்கு கூற விளைகின்ற செய்தி என்ன? கலாநிதி ரசல் தன்னை ஜொள்ளாகவும், ஜொள்ளை கலாநிதி ரசலாகவும் உணர்கின்றாரா? இதனாலேயே “Yes, I come up! என்று கூறுகின்றாரா? எது எப்படியிருப்பினும், கலாநிதி ரசல் ஏன் சுயநினைவை இழக்கவேண்டும்?
கலாநிதி ரசல் ஜொள்ளுடன் உரையாடும்போது அவர் தனது சுயநினைவை இழப்பதனால் கலாநிதி ரசலுக்கும், ஜொள்ளுக்கும் இடையில் இப்போது ஓர் தடையை அவரது செயலாளர்கள் ஏற்படுத்துகின்றார்கள். இந்த இரண்டாவது உரையாடலே அவர்கள் இருவரும் தமது வாழ்க்கையில் ஒருவருடன் ஒருவர் தொலைபேசியூடாக பரிமாறுகின்ற இறுதி உரையாடல் என்பதை கலாநிதி ரசல், ஜொள் இருவருமே அப்போது அறிந்து இருக்க மாட்டார்கள்.
கலாநிதி ரசலும், ஜொள்ளும் ஒருவருடன் ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே உரையாடல் – அதுவும் தொலைபேசியூடாக மட்டும் செய்து இருக்கின்றார்கள். இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய விடயம், இந்த இரண்டு தடவைகளுமே கலாநிதி ரசல் தனது சுயநினைவை இழந்தார். ஜொள் இபோது தெளிவாக இருந்தான். கலாநிதி ரசலை ஜொள் நேரடியாக சந்தித்து உரையாடுவதை தவிர்த்தான். கலாநிதி ரசலை ஜொள் நேரடியாக சந்தித்து உரையாடும்போது அவருக்கு உயிராபத்து ஏற்படக்கூடும் என்பதே இதற்கான ஒரேயொரு காரணமாக இருந்தது.
தொலைபேசியூடாக உரையாடும்போதே கலாநிதி ரசல் சுயநினைவை இழப்பதனால், அவரை நேரடியாக சந்தித்து உரையாடும்போது அவருக்கு உயிராபத்து ஏற்படக்கூடும் என்று ஜொள் அஞ்சினான். கலாநிதி ரசலின் செயலாளர்களும் இவ்வாறே நினைத்தார்கள். கலாநிதி ரசல் உலகில் முக்கியமான ஓர் மனிதர். ஜொள்ளுடன் கலாநிதி ரசலை உரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தால் கலாநிதி ரசலின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று அவரது செயலாளர்கள் அஞ்சினார்கள்.
ஜொள் உண்மையில் ஓர் பிரயோக / கல்விசார் மனவியலாளனா? மனவியலை பற்றி ஜொள்ளுக்கு என்ன தெரியும்?
உண்மையை கூறப்போனால் ஜொள் ஓர் மனிதன் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. ஓர் சாதாரண மனிதனாக தன்னை இனம் காட்டிக்கொள்வதையே ஜொள் விரும்பினான். ஆனால், அவனது அறிவியல் கண்டறிதல்களை மக்களிடம் எடுத்து செல்வதற்கு ஜொள்ளிற்கு ஓர் பட்டப்பெயர் தேவைப்பட்டது. இதற்காகவே ஆரம்பத்தில் தான் ஓர் பிரயோக / கல்விசார் மனவியலாளன் என்று ஜொள் தன்னை அறிமுகம் செய்தான்.
புத்திக்கூர்மை பொறியினுள் [ Intelligent Trap ] அகப்பட்டுள்ள மக்களை அதனில் இருந்து வெளியேற்றி, தான் தரிசித்த உலகத்தை காண்பிக்க வைப்பதற்கு ஜொள்ளிற்கு நிச்சயம் ஓர் பட்டப்பெயர் தேவைப்பட்டது. பிரயோக / கல்விசார் மனவியலாளன் என்பது ஜொள்ளின் பேரறிவின் சிறப்பானதொரு ஏற்பாடு.
நாட்கள் சில கடந்தன. ஜொள் தனது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகினான். என்ன செய்யப் போகின்றான்? இரண்டு, மூன்று கடதாசிகளில் மீண்டும் வாழ்வியல், அறிவியல் சம்மந்தமாக சில குறிப்புக்களை எழுதியவன் அவற்றில் ஐம்பது பிரதிகளை எடுத்தான். ஐம்பது கடித உறைகளை வாங்கியவன், ஐம்பது ஆவண கோப்புக்களையும் அவற்றினுள் வைத்தான். தபால் நிலையம் சென்ற ஜொள், அவற்றில் பத்து கடிதங்களை சர்வதேச நாட்டு முகவரிகளுக்கும், நாற்பது கடிதங்களை காந்தருவம் நாட்டு முகவரிகளுக்கும் விலாசம் இட்டு, அவற்றுக்கு தேவையான முத்திரைகளையும் ஒட்டி தபாலகத்தில் சமர்ப்பித்தான். அனுப்பப்பட்ட நாற்பது கடிதங்களில் சுமார் பத்து காந்தருவம் நாட்டில் இருக்கின்ற வெவ்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அறிவுக்கூடங்களிற்கு அனுப்பப்பட்டது. மிகுதி சுமார் முப்பது கடிதங்கள் வெவ்வேறு தனியார், அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.
நிறுவனங்களுக்கு அனுப்புகின்ற ஆவணங்களிற்குரிய முகவரிகளை காந்தருவம் நாட்டில் சர்வதேச மொழியில் வெளிவருகின்ற ஓர் பிரபல நாளிதழில் இருந்து ஜொள் பெற்றான். ஜொள்ளினால் அனுப்பப்பட்ட கடிதங்களில் சுவாரசியமான ஓர் முகவரியும் காணப்பட்டது. அது காந்தருவம் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் துணைவேந்தர் – Vice Chancellor – பதவிக்கான வெற்றிட விண்ணப்பம். குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரிக்கும் தனது ஆவணங்களில் ஓர் பிரதியை ஜொள் முகவரியிட்டு அனுப்பினான்.
இந்த ஆவணத்தில் புதிதாக ஓர் விடயத்தை ஜொள் குறிப்பிட்டு இருந்தான். அவன் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்த பல விடயங்களில் ஓர் புதிய கற்பனை சூத்திரம் ஒன்றும் ஏறக்குறைய இவ்வாறு விபரிக்கப்பட்டு இருந்தது:
அரச தலைவர் பற்றீசாவுக்கு தொலைநகல்களில் பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்களை அனுப்பியது போலவே, கலாநிதி ரசலுக்கும் ஜொள் தினமும் பல விடயங்களை தொலைநகல்கள் ஊடாக அனுப்பிக்கொண்டு இருந்தான். கலாநிதி ரசலுடனான ஜொள்ளின் தகவல் பரிமாற்றம் முக்கியமாக தொலை நகலூடாகவே நடைபெற்றது. கலாநிதி ரசலுக்கு அவன் அனுப்பிய தொலைநகல்கள் மிகவும் நகைச்சுவையாக எழுதப்பட்டு இருந்தன. கலாநிதி ரசல் காந்தருவம் நாட்டிற்கு குடிபெயர்வதற்கு முன்னர் – சுமார் நாற்பத்தொரு வருடங்களுக்கு முன்னதாக தனது மனைவியை விவாகரத்து செய்து இருந்தார். தத்துவ ஆராய்ச்சிகள் மூலம் கலாநிதி ரசலுடன் மோதிக்கொண்ட ஜொள், ஓரிடத்தில் தொலைநகலின் அடிப்பகுதியில், பல விடயங்களை விபரணம் செய்துவிட்டு இறுதியாக, “இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, தங்கள் விவாகரத்து செய்யப்பட்ட மனைவி” என்று எழுதியிருந்தான்.
அறிவியல், வாழ்வியல் சம்மந்தமாக கலாநிதி ரசல் பல சிந்தனைகளை தவறாக விளங்கி வைத்து இருப்பதாக ஜொள் கருதினான். பல தொலைநகல்கள் அவரது சிந்தனைகள் ஏன் தவறானவை என்று சுட்டிக் காட்டுவனவாக இருந்தன.
ஜொள் அனுப்பிய ஓர் தொலைநகலில் ஏறக்குறைய கீழ் உள்ளவாறு ஓர் விடயம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அத்துடன் ஓர் இலட்சிய செய்மதிக்குரிய மாதிரி வடிவமைப்பையும் ஜொள் வரைந்து அனுப்பினான். அவனது இலட்சிய செய்மதி கோள வடிவமாக காணப்பட்டது. வெளிப்புறமாக ஓர் கோளமும், உட்புறமாக இன்னோர் கோளமும் காணப்பட்டன. இரண்டு கோளங்களையும் மூன்று கால்கள் இணைத்து தாங்கின. வெளிப்புற கோளம் பெறுனராகவும், உட்புற கோளம் அனுப்புனராகவும் குறிக்கப்பட்டு இருந்தன. ஜொள்ளின் இந்த மாதிரி வடிவமைப்பு “Low Orbit Satellite” இற்குரிய ஓர் சிந்தனையாகவும் விளங்கியது. செய்மதிகளின் வடிவம் கோள வடிவமாக இல்லாமல் இருப்பது அவை தமது பாதையில் இருந்து விலகுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது என ஜொள் கருதினான்.
If you we want your our Satellite rounding Earth like a Moon, you we have to change the shape of the Satellite to like a ball.


J Zero L Org