ஓர் மனிதனின் சில நாட்கள்
கற்பனை விஞ்ஞான கதை

J Zero L Org

Browse: Home / Tamil / [ 6 ]

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]

[ 6 ]

By Author on 01/30/2010

ஜொள்ளிற்கு எப்படி அந்த இடத்திற்கு போகவேண்டும், குறிப்பிட்ட அந்த நேரத்தில் அங்கு நிற்கவேண்டும் என்று தெரிந்தது? அவனிடம் தொலைபேசி இல்லை, இதர தொடர்பு சாதனங்களும் இல்லை. எப்போதாவது சில சமயம் ஒரு சில நண்பர்கள், உறவினர்கள் வருகை தவிர, அவன் இல்லத்திற்கு ஒருவரும் அவனை தேடி வருவதும் இல்லை.

இன்று காலை அவசர அவசரமாக திடீரென எங்கோ புறப்படுவதற்கு ஜொள் தயாராகினான். சீருடை போன்று பயன்படுத்தும் வழமையாக தான் அணிகின்ற வெள்ளை மேலாடையையும், கறுப்பு அல்லது சாம்பல் நிற கீழாடையையும் அணிந்தான். ஜொள் பல வருடங்களாக சில சோடி உடைகளையே மீண்டும் மீண்டும் சுத்தம் செய்து பயன்படுத்தினான். அவனைப் பொறுத்தவரையில் ஆடைகளுக்கு நேரத்தை வீண்விரயம் செய்யமுடியாது.

இரண்டு, மூன்று சோடி ஆடைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்வது அவனுக்கு மிகவும் பிடித்த இலகுவான வழிமுறையாக தெரிந்தது. இளம் வயதில் தனது தத்துவ ஆராய்ச்சிகளை ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்த பழக்கத்தை ஜொள் கடைப்பிடித்தான். தனக்கு என்று அவன் பொதுவாக எதையும் சேர்த்து, பாதுகாத்து வைப்பது இல்லை. கிடைக்கின்ற பரிசுப் பொருட்களையும் அவன் வேறு எவரிடமாவது கொடுத்து விடுவான்.

காலை ஆகாரம் உட்கொண்டானா? தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் நடக்கத் தொடங்கினான். வெளியில் செல்லும்போது ஜொள் எப்போதும் சப்பாத்தை அணியும் வழக்கம் கொண்டு இருந்தான். வழமையில் அவன் வீட்டில் இருந்து மூன்று வெவ்வேறு வழிகளால் செல்ல முடியும். ஆறுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பேருந்துகளில் ஏறி தேவைப்பட்ட இடங்களிற்கு செல்லமுடியும். இன்று அவன் எங்கு செல்லப்போகின்றான்? எந்தப்பாதையால் சென்று, எந்த இலக்க பேருந்தில் இன்று பயணிக்கப் போகின்றான்? சிற்றறிவு அமைதியாக இருந்தது. பேரறிவு வழிநடாத்தியது.

பேருந்து ஒன்றில் ஏறிவிட்டான். சரியான இலக்க பேருந்திலா ஜொள் பயணித்துக்கொண்டு இருக்கின்றான்? பார்ப்போம். பேருந்தின் யன்னல் ஓரம் உள்ள ஓர் இருக்கையில் உட்கார்ந்து வெளியே நோட்டமிட்டு இரசித்துக் கொண்டு இருந்தான். பேருந்து பயணிகளால் நிறைந்து காணப்பட்டது. சுமார் இருபது நிமிடங்கள் பயணித்து இருப்பான். தூரத்தில், திடீரென அவனுக்கு மிகவும் பரீட்சயமான ஓர் மகிழூர்தி தென்பட்டது. அந்த மகிழூர்தியை கண்ட கணத்தில் ஜொள்ளின் சிற்றறிவு சற்று தடுமாறிவிட்டது. ஆனால், பேரறிவு உடனடியாக சுதாகரித்து கொண்டது. ஏன்?

சில மாதங்களிற்கு முன்னர் நடைபெற்ற ஓர் சிறு சம்பவம் காரணமாக ஜொள்ளை கலாநிதி ரசல் இல்லத்தில் இருந்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அந்த மகிழூர்தியிலேயே ஜொள்ளிடம் சில விளக்கங்கள் கேட்பதற்காக காந்தருவம் நாட்டு இரகசிய காவல்துறையினர் அழைத்து சென்று இருந்தார்கள். இப்போது மீண்டும் அதே மகிழூர்தி ஜொள் முன்னால். ஏன்?

ஜொள் பயணம் செய்த பேருந்து சற்று மெதுவாக செல்லவேண்டி தற்போது ஏற்பட்டது. ஜொள்ளின் பேரறிவுக்கு உடனடியாகவே தன்னைச்சுற்றி என்ன சம்பவம் நடைபெறுகின்றது என விளங்கியது. சம்பவம் அல்ல, ஓர் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

கலாநிதி ரசலின் இல்லத்திற்கு ஜொள் வழமையாக செல்லும் பேருந்து பாதையின் இருமருங்கிலும் சுமார் ஐநூறு தொடக்கம் ஆயிரம் வரையிலான காந்தருவம் நாட்டு காவல்துறையினர் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். ஜொள்ளின் பேருந்து நிறுத்தப்பட்டு நிற்கின்றது. மிகவும் அகலமான அந்த தெருவில் தற்போது ஜொள்ளின் சிற்றறிவை சீண்டிய மகிழூர்தி மிக மெதுவாக நகர்கின்றது.  ஓர் காவல்துறை அதிகாரி கைகளை உயர்த்தி மரியாதை செய்து அந்த மகிழூர்தியை கெளரவிக்கின்றார். ஜொள்ளின் சிற்றறிவு அமைதியாக இருந்தது. ஜொள்ளின் பேரறிவும் அமைதியாக இருந்தது.

ஜொள் ஒவ்வொரு காவல்துறை வீரர்களினதும் முகங்களை கூர்மையாக அவதானித்தான். அவனுக்கு அவர்கள் காந்தருவம் நாட்டு காவல்துறை வீரர்கள் போல தெரியவில்லை. அவர்களை தன்னைப்போன்ற சாதாரண மனிதர்களாகவே ஜொள் உணர்ந்தான். தன்னைப்போல மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ விரும்புகின்ற ஜீவன்களையே அவன் தரிசித்தான். ஜொள்ளின் பார்வையில் அங்கு சட்டம் தெரியவில்லை, ஒழுங்கு தெரியவில்லை, அரசு தெரியவில்லை, மனிதம் மட்டுமே தெரிந்தது. அவனைப்போன்ற மனிதர்கள் வரிசையாக நிற்கின்றார்கள். எதற்காக? ஜொள்ளிற்கு உத்தியோகபூர்வமாக காந்தருவம் நாட்டு அரசின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்படுகின்றதா? அப்படியானால்..?

ஜொள் காந்தருவம் நாட்டு அரசாங்கத்தில் இப்போது ஓர் மிக முக்கிய இரகசிய பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளானா?  அந்தப்பதவி என்ன என்று ஜொள்ளின் சிற்றறிவுக்கு தெரியுமா? தெரியவேண்டிய அவசியம் இருக்கின்றதா? ஜொள்ளிற்கு கொடுக்கப்பட்ட பதவி என்ன பதவியாய் இருக்கலாம்? காந்தருவம் நாட்டு இரகசிய காவல்துறையின் பணிப்பாளர்?

ஜொள் அடிப்படையில் ஓர் உளவாளி அல்ல. அவனுக்கு போர்ப் பயிற்சியும் கிடையாது. ஓர் துப்பாக்கியை எப்படி இயக்குவது என்கின்ற அடிப்படை விடயமே அவனுக்கு தெரியாது. சிறுவயதில் பாடசாலைக்கு அவனுடன் கல்வி கற்கின்ற சிறுவர்கள் விளையாட்டாக கொண்டு வருகின்ற வெற்று துப்பாக்கி ரவைகளை மாத்திரமே அவன் கைகளில் தொட்டுப் பார்த்து இருக்கின்றான். ஓர் கிரனைற் குண்டை எப்படி எறிவது, வெடிக்க வைப்பது என்கின்ற அடிப்படை விடயமே அவனுக்கு தெரியாது. அப்படிப்பட்டவன் எப்படி காந்தருவம் நாட்டு காவல்துறையின் இரகசிய பிரிவில் ஓர் பணிப்பாளர் தர பதவியை வகிக்க முடியும்? இது அரச தலைவர் பற்றீசாவின் ஏற்பாடா? அல்லது ஜொள்ளின் பேரறிவின் ஏற்பாடா? அல்லது கலாநிதி ரசலின் ஏற்பாடா? அல்லது மத பீடாதிபதிகளின் ஏற்பாடா?

கடந்த சில மாதங்களில் காந்தருவம் நாட்டில் எவ்வளோ பல துயர் மிகுந்த சம்பவங்கள் நடைபெற்று விட்டன. ஜொள் காந்தருவம் நாட்டு சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்பட்டே தனது ஒவ்வொரு செயற்பாடுகளையும் மேற்கொண்டான். அவன் எவருக்கும் தீங்கு செய்ய நினைக்கவில்லை. காந்தருவம் நாட்டு மக்களை இனம், மதம், மொழி வேறுபாடின்றி காப்பாற்றுவதே அவனது நோக்கமாக இருந்தது.

ஜொள்ளின் பேரறிவு காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவுக்கு வன்முறைகள் சம்மந்தமாக தத்துவ ஆராய்ச்சிகள் செய்து பல இரகசிய தகவல்களை வழங்கி இருந்தது. சில மாதங்களிற்கு முன்னர் ஜொள்ளின் பேரறிவு வழங்கிய பல தகவல்கள் நடைமுறை உண்மைகளாக காந்தருவம் நாட்டில் நிகழத்தொடங்கி இருந்தன. ஜொள் அரச தலைவர் பற்றீசாவுக்கு அனுப்பிய பல தொலைநகல்களில் ஓர் தொலைநகல் ஏறக்குறைய இவ்வாறு இருந்தது:

ஜொள் காந்தருவம் நாட்டு மக்கள் அனைவரையுமே இனம்,  மதம், மொழி பாகுபாடின்றி நேசித்தான். தன்னைச் சுற்றி அசம்பாவிதங்கள் நிகழ்ந்தபோது ஜொள்ளினால் அவற்றைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. உடனடியாகவே ஜொள்ளின் பேரறிவு அவற்றை கட்டுப்படுத்துவது சம்மந்தமாக பலவித தத்துவ ஆராய்ச்சிகளை செய்து அரச தலைவர் பற்றீசாவுக்கு வழங்கிக்கொண்டு இருந்தது. அனைத்து தகவல்களும் தூய தத்துவ ஆராய்ச்சிகளாகவே இருந்தன.  அதாவது ஜொள் ஓர் அறிஞனாகவே செயற்பட்டான். அவன் எதையும் மற்றவர்களுக்கு மறைக்கவில்லை. மற்றவர்களைப்போல் ஓர் சாதாரணமான மனிதனாக வாழ்வதையே ஜொள் விரும்பினான்.

காந்தருவம் நாட்டு விடுதலைப் போராளி சைமனின் எதிர்கால நடவடிக்கைகளாக அமையக்கூடிய பல விடயங்களை பற்றியும் தனது தூய தத்துவ ஆராய்ச்சிகள் மூலம் அரச தலைவர் பற்றீசாவுக்கு ஜொள் முன்கூட்டியே வழங்கி இருந்தான்.

ஜொள்ளின் பேரறிவு, ஓர் செய்மதி எப்படி பூமியில் ஓரிடத்தில் இருந்து தகவல்களை பெற்று இன்னோர் இடத்திற்கு வழங்குமோ அவ்வாறே தனது தூய தத்துவ ஆராய்ச்சிகள் மூலம் எதிர்காலத்தை எதிர்வு கூறி இருந்தது. ஜொள் அரச தலைவர் பற்றீசாவுக்கு விடுதலைப் போராளி சைமனைப் பற்றிய தகவல்களை வழங்கிய தகவல் பரிவர்த்தனை நிலையத்தின் பெயர் “சைமன் தகவல் பரிவர்த்தனை நிலையம்” என ஏற்கனவே பெயர் சூட்டப்பட்டு இருந்தது. ஜொள்ளின் பேரறிவு சுயமாகவே அந்த குறிப்பிட்ட பெயரை உடைய தகவல் பரிவர்த்தனை நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்தே தலைவர் பற்றீசாவுக்கு சைமன் பற்றிய தகவல்களை தத்துவ ஆராய்ச்சி செய்து வழங்கியது.

இவ்வாறே ஏற்கனவே பற்றீசாவின் பெயர் சூட்டப்பட்ட ஓர் தகவல் பரிவர்த்தனை நிலையத்தை ஜொள்ளின் பேரறிவு தன்னிச்சையாக தேடிச் சென்றடைந்து, “பற்றீசா” தகவல் பரிவர்த்தனை நிலையத்தில் இருந்தும் அரச தலைவர் பற்றீசாவுக்கு தொலைநகல்களை அனுப்பியது.

ஜொள்ளின் பேரறிவு ஏன் விடுதலைப் போராளி சைமனுக்கு எதிராக இயங்கவேண்டும்? அப்படியானால், ஜொள்ளின் பேரறிவு காந்தருவம் நாட்டு இனச்சிக்கலை தீர்த்து வைப்பதற்கு அரச தலைவர் பற்றீசாவிடம் எவ்வாறான விடயங்களை தூய தத்துவ ஆராய்ச்சிகள் செய்து முன்மொழிந்து இருந்தது? காந்தருவம் நாட்டை இரண்டு கூறுகளாக பிரிக்க முடியுமா? அது நடைமுறைச் சாத்தியமானதா? காந்தருவம் நாட்டு இனப்பூசலை ஜொள் எவ்வாறு அணுகியுள்ளான்?

இது கனவா? நனவா? அல்லது பிரமையா? எப்படி இவையெல்லாம் சாத்தியம்? இப்போது என்ன நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது? ஜொள்ளின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவா? ஜொள்ளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், அவனது எதிர்காலம் என்ன? அவன் ஓர் கணணி மனிதனா? காந்தருவம் நாடு தற்போது ஜொள்ளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா? கலாநிதி ரசல் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கின்றார்? கலாநிதி ரசல் ஜொள்ளின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்? ஜொள்ளின் அறிவியல் பரிசோதனைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு எப்போது அவன் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பப் போகின்றான்?

Posted in Tamil | Tagged ஆறு

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]
« [ 5 ] [ 7 ] »

© 2010 J Zero L Org | பின்னூட்டல்