ஓர் மனிதனின் சில நாட்கள்
கற்பனை விஞ்ஞான கதை

J Zero L Org

Browse: Home / Tamil / [ 5 ]

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]

[ 5 ]

By Author on 01/29/2010

கடந்ததினம் முதல் தடவையாக கலாநிதி ரசலினை சந்தித்து, அவருக்கு அதிர்ச்சியை கொடுத்த ஜொள் மறுநாள் காலை மீண்டும் அவரை சந்திப்பதற்காக அவர் இல்லத்திற்கு சென்றான். ஜொள் குடும்பத்தினருடன் வசிக்கும் தற்காலிக வாடகை குடியிருப்பு கலாநிதி ரசலின் நிரந்தர இல்லத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருந்தது. பல தடவைகள் முழுமையாகவும், பகுதியாகவும் ஜொள் அந்த நீண்ட தூரத்தை கால்நடையாகவே சென்று அடைந்தான். சிலவேளைகளில் அவன் தனது பல்கலைக்கழகத்திற்கு பேருந்தில் சென்று, பின்னர் அங்கிருந்து கால்நடையாக கலாநிதி ரசலின் இல்லத்திற்கு சென்றான்.

ஜொள் காந்தருவம் நாட்டின் தலைநகருக்கு வந்து சுமார் ஒரு வருடமே ஆகி இருந்தது. தலைநகருக்கு வருவதற்கு முன்னர் அவன் காந்தருவம் நாட்டின் வடமுனைவில் இருந்தான். ஜொள் இயற்கையாகவே பாதைகளை, வரைபடங்களை நினைவில் வைத்து இருப்பதில் திறமைசாலியாக இருந்தாலும் நாட்டில் நிலவிய பதற்ற நிலமை காரணமாக தலைநகரில் தனது சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வைத்து இருந்தான். எனினும், அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்திய பின்னர் தலைநகரின் ஏறக்குறைய முக்கிய சகல பகுதிகளையும் கால்நடையாகவே கடந்தான். தேவை ஏற்படும் பட்சங்களில் மட்டும் பேருந்தினை பயன்படுத்தினான். எப்போது பேருந்தில் செல்லவேண்டும், எப்போது கால்நடையாக செல்லவேண்டும் என்பதை ஜொள்ளின் பேரறிவு தீர்மானித்தது.

கலாநிதி ரசலின் அலுவலகத்தின் வாசலில் விருந்தினர் தொடர்பிற்கு வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஊடாக செயலாளர் ஒருவரிடம் தான் வந்திருக்கும் செய்தியை ஜொள் தெரிவித்தான். செயலாளர் சற்று காத்திருக்குமாறு தொலைபேசியூடாக கூறியபின், கீழே வந்து அலுவலக விருந்தினர் பகுதியில் அவனை உட்கார வைத்துவிட்டு, மீண்டும் சற்று காத்திருக்குமாறு கூறியபின், அலுவலகத்தின் மேல்மாடிப் பகுதிக்கு சென்றார். நேற்று உரையாடிய ஓரளவு இளையவரான செயலாளர் ஜொள்ளின் பார்வையில் இன்று படவில்லை. நடுத்தர வயதினை சேர்ந்த செயலாளரே ஜொள்ளுடன் உரையாடினார்.

கீழ்மாடி விருந்தினர் பகுதியில் ஓய்வாக ஓர் சொகுசுக் கதிரையில் உட்கார்ந்து கலாநிதி ரசலின் அலுவலகத்தை ஜொள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். பல்வேறுவிதமான பொருட்கள், பதக்கங்கள், நற்சான்றிதல்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. ஜொள் அமைதியாக இருந்தான். அவனது சிற்றறிவு, பேரறிவு இரண்டுமே மிகவும் பொறுமையுடன், அமைதியுடன் காணப்பட்டன.

கீழ்மாடி விருந்தினர் பகுதிக்கு திரும்பிவந்த செயலாளர் கலாநிதி ரசலின் ஓர் கடிதத்தை ஜொள்ளிடம் சமர்ப்பித்தார். நன்றி கூறிய ஜொள் உறையினுள் உள்ள கடித்தை உடனடியாகவே திறந்து பார்த்தான். கடிதத்தின் வெளிப்புறமாக ஜொள்ளின் பெயர் எழுதப்பட்டு இருந்தது.

கடிதத்தில், தான் எழுதிய விஞ்ஞான புனை கதை ஒன்றின் முதலாவது எதிர்வுகூறல் நிறைவேறுவதற்கு இன்னமும் சில வருடங்களே இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. கடந்த பல வருடங்களாக தான் போலியோ நோயினால் பீடிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் பல்வேறு உபாதைகளை அடையவேண்டியுள்ளதாகவும், நீண்ட காலமாக தள்ளுவண்டியில் தனது காலம் கழிவதாகவும் கலாநிதி ரசல் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தினமும் அதிகநேரம் தான் உறங்குவதாகவும், சில மணிநேரங்களே தான் விழித்திருந்து சுறுசுறுப்புடன் பணி ஆற்றுவதாகவும் எழுதி இருந்தார். ஜொள்ளின் சிந்தனைகள்பற்றி தன்னால் உடனடியாக ஏதும் கருத்து கூறமுடியாமைக்கு தனது வருத்தங்களை தெரிவித்து இருந்ததோடு, ஜொள் தனது முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு உளங்கனிந்த வாழ்த்துகளும் தெரிவித்து இருந்தார். மடலின் இறுதியில் தனது பட்டங்களை, பதவிகளை குறிப்பிட்டு இருந்தார்.  கடிதத்தில், கலாநிதி ரசலின் பட்டங்களும், பதவிகளும் மிகவும் நீண்டதொரு பட்டியலாக காணப்பட்டது. ஏறக்குறைய, மடலின் முக்கால்வாசிப் பகுதியை அந்தப்பட்டியல் பெற்று இருந்தது.

ஜொள்ளின் பேரறிவு உடனடியாகவே மடலின் உள்ளார்ந்தத்தை புரிந்துகொண்டது. தனது அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஜொள் புறப்பட தயாராகினான். அலுவலகத்தை விட்டு புறப்பட முன்னர் கலாநிதி ரசலின் செயலாளரிடம் கலாநிதி ரசலிற்கு இவ்வாறு தான் கூறியதாக கூறச்சொன்னான். இதை மிகவும் உரத்துச் சொன்னான்:

Tell him, “I love you!”

இதைக்கேட்ட செயலாளர் ஜொள்ளை பார்த்து ஆச்சரியத்துடன் புன்னகை செய்தார். ஜொள் கலாநிதி ரசலை காதலிக்கின்றானா? ஜொள் ஏன் அப்படிக் கூறினான்? அதன் உண்மையான, உள்ளார்ந்த அர்த்தம் என்ன? நிச்சயம் அதன் உள்ளார்ந்த அர்த்தம் கலாநிதி ரசலின் பேரறிவுக்கு புரிந்து இருக்கும். கலாநிதி ரசலின் பேரறிவும், ஜொள்ளின் பேரறிவும் இப்போது சமாந்தரமாக ஒரே பாதையில் இயங்கத்தொடங்கி இருந்தன. அப்படியானால்..? கலாநிதி ரசல் ஜொள்ளின் கண்டறிதலை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் செய்துவிட்டாரா? கலாநிதி ரசல் ஜொள்ளிற்கு கொடுத்த கெளரவமாகவே அவனுக்கு எழுதிய மடலில் அவரது மிக நீண்ட பட்டங்கள், பதவிகளின் பட்டியல்கள் இருந்தனவா?

மீண்டும் ஜொள் மின்னல் வேகத்தில் இயங்கினான். கலாநிதி ரசலின் மடலை தகவல் பரிவர்த்தனை நிலையம் ஒன்றிற்கு கொண்டு சென்றவன், அதில் இருபது பிரதிகளை எடுத்தான். இருபது கடித உறைகளினுள் ஒவ்வொரு பிரதியையும் வைத்தான். ஒவ்வொரு கடித உறையின் வெளிப்புறமாகவும் “நற்செய்தி” என்று எழுதினான். இப்போது மீண்டும் மின்னல் வேகத்தில் சில அறிவியல், வாழ்வியல் விடயங்களை ஓர் கடதாசியில் எழுதி அதிலும் இருபது பிரதிகளை எடுத்தான். ஒவ்வொரு பிரதியையும் “நற்செய்தி” என தலைப்பிடப்பட்ட கடித உறையினுள் வைத்தான். ஜொள்ளின் கைகளில் அசலுடன் சேர்த்து மொத்தம் இருபத்தொரு ஒரே மாதிரியான கடித உறைகள் தற்போது காணப்பட்டன. அடுத்த கட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டன. இனி, என்ன செய்யப் போகின்றான்?

காந்தருவம் நாட்டின் தலைநகரில் உள்ள மிகவும் பிரபலமான ஓர் பிரதேசத்தில் நெரிசலான மக்கள் கூட்டம், மற்றும் வாகனங்களினால் செரிந்து நிறைந்த தெருச் சந்தியில் மிக விரைவாக இருபத்தொரு கடிதங்களையும் வேகமாக ஓடியோடி இருபத்தொரு வெவ்வேறு நபர்களிடம் ஜொள் சமர்ப்பித்தான். ஒவ்வொரு நபர்களிடமும் கடித உறையை சமர்ப்பித்தபோது “நற்செய்தி” என்று அவர்களிடம் கூறிவிட்டே அதை சமர்ப்பித்தான். பேருந்தில் சென்றவர்கள், ஏனைய வாகனங்களில் சென்றவர்கள், நடைபாதையாக சென்றவர்கள் என ஜொள்ளிடம் இருந்து மடலை பெற்றவர்களில் படைவீரர்கள், காவல்துறையினரும் அடங்கியிருந்தார்கள். அதாவது, இருபத்தொரு மனிதர்களின் பேரறிவு இப்போது ஜொள்ளின் பேரறிவின் வலைப்பின்னலில் இணைக்கப்பட்டு விட்டதா?

கலாநிதி ரசல் ஜொள்ளிற்கு எழுதிய மடல் தவிர, “நற்செய்தி” என கடித உறையின் வெளிப்பகுதியில் எழுதி கையளித்த கடதாசியில் ஜொள் எவ்விடயங்களை குறிப்பிட்டு இருந்தான்? ஜொள்  வரைந்த கடதாசி ஏறக்குறைய இவ்வாறு இருந்தது:

Good News 01: …

Good News 02: …

Good News 03: …

Good News 04: …

Good News 05: …

Good News 06: …

Good News 07: …

Good News 08: …

Good News 09: …

Good News 10: Good News will continue, if you love yourself and others!

இவற்றுடன், கலாநிதி ரசல் தனது நோயில் இருந்து குணம்பெறுவதற்காக தான் காத்திருப்பதாகவும் கடதாசியில் ஜொள் எழுதி இருந்தான். கடிதத்தில் தனது பெயர், பல்கலைக்கழக விபரம், தனது வீட்டு முகவரி என்பவற்றையும் குறித்து இருந்தான். சுவாரசியமான பல்வேறு விடயங்கள் பற்றி மேலே 1, 2, 3, 4.. என இலக்கமிடப்பட்ட நற்செய்திகளில் எழுதப்பட்டு இருந்தன. தற்போது கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படுகின்ற பல விடயங்கள் தவறானவை என்று ஜொள் குறிப்பிட்டு இருந்தான். அவன் தவறு என்று குறிப்பிட்ட விடயங்களில் ஒளி,  உண்மையான, இலட்சியபூர்வமான வைரஸ் கிருமி சம்மந்தமாகவும் சில தகவல்கள் இருந்தன. மேலுள்ள ஓர் நற்செய்தியில் ஏறக்குறைய இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது:

Virus has three legs because for  a successful landing three legs are enough.

ஒளி ஒளிரும் பொருளில் இருந்து எமது கண்களை அடையவில்லையெனவும், மாறாக கண்களில் இருந்தே ஒளி வெளியேறுவதாகவும் கூறி இருந்தான். உண்மையில் பார்வைப் புலனிற்கான ஒளி வெளியில் இருந்து உள்ளே வருகின்றதா? அல்லது உள்ளே இருந்து வெளியே செல்கின்றதா? அல்லது, இங்கு ஜொள் “ஒளி, இலட்சிய வைரஸ்” என்று வழமையில் பேசப்படுவது அல்லாத வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றானா? ஜொள்ளின் பேரறிவு அவற்றுக்கான விளக்கங்களை அறிந்து இருந்ததா? அவன் பயன்படுத்தும் பதங்கள் வேறு விடயங்களை குறிக்கின்றனவா?

சரி, மீண்டும் விடயத்திற்கு வருவோம். ஜொள்ளின் தத்துவ விசாரணைகள் ஒருபுறம் இருக்க, அவன் ஏன் தொடர்ச்சியாக தகவல்களை விநோதமான பாணியில் பல்வேறு நபர்களிடையே பரப்பிக்கொண்டு இருக்கின்றான்? அவனது உள்நோக்கம் என்ன? பேரறிவு ஜொள்ளை ஏன் இவ்வாறு வழிநடாத்துகின்றது? ஜொள்ளிற்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?

அறிவியல் ரீதியாக ஜொள்ளின் நடவடிக்கைகள் எதை உணர்த்த விளைகின்றன? உண்மையில் தற்போது என்ன நடக்கின்றது? காந்தருவம் நாடு ஜொள்ளின் பேரறிவின் கட்டுப்பாட்டினுள் வரப்போகின்றதா?

Posted in Tamil | Tagged ஐந்து

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]
« [ 4 ] [ 6 ] »

© 2010 J Zero L Org | பின்னூட்டல்