அப்போது நேரம் காலை சுமார் நான்கு முப்பது இருக்கும். தனது சிந்தனைகளை காந்தருவம் நாட்டு மக்களுடன் முதல் தடவையாக உத்தியோகபூர்வமான முறையில் பகிர்ந்துகொள்வதற்கு ஜொள் தயாராகிக்கொண்டு இருந்தான். ஒரே மாதிரியான மூன்று ஆவணக்கோப்புக்கள் சாதாரண கடதாசிகள் மூலம் கைவினையாக உருவாக்கப்பட்டு இருந்தன. அதில் சர்வதேச மொழியில் பல்வேறு குறியீடுகளாக வெவ்வேறு விடயங்கள் விபரிக்கப்பட்டு இருந்தன. அவை சாதாரண எழுதுகோலினால் வரையப்பட்டு இருந்தன. கோப்பின் வெளிப்புறமாக “நற்செய்தி” என்று எழுதப்பட்டு இருந்தது.
ஜொள் அதை எப்படி எழுதினான்? அவன் எழுதவில்லை, அவனது பேரறிவு அதை எழுதியது. நாங்கள் பறவைகளின் இசையை கேட்டு இருக்கின்றோம். தோகைவிரித்து ஆடும் மயிலை பார்த்து இருக்கின்றோம். எழுத்துக்கள், குறியீடுகள் நடனமாடுவதை பார்த்து இருக்கின்றோமா? சடப்பொருட்களான எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உயிர்ப்பு அடைந்து அசைந்தாடத் தொடங்கினால் எப்படி இருக்கும்?
நற்செய்தி என எழுதப்பட்டு மூன்று வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கானது என குறிப்பிடப்பட்டிருந்த அந்த ஒரே மாதிரியான ஆவணங்களில் மூன்று விடயங்கள் முக்கியமான சாரம்சமாக பேசப்பட்டு இருந்தன. ஜொள்ளின் பேரறிவு அந்த ஆவணத்தில் அழகியதொரு தூய தத்துவ ஆராய்ச்சியை நிகழ்த்தி இருந்தது. ஆராய்ச்சியை செய்வதற்கு – ஆவணத்தை உருவாக்குவதற்கு எடுத்த நேரம்? சுமார் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இருக்கலாம்.
காந்தருவம் நாட்டில் நிலவும் இனப்பூசல் முற்றுப்பெற்று அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கு காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவும் காந்தருவம் நாட்டு விடுதலைப் போராளி சைமனும் ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்தவேண்டும், உலகத்தில் இருக்கின்ற இரண்டு கொடிய நோய்களுக்கான மருந்தின் மூலம் Elephant Treeஇல் இருக்கின்றது, ஓர் கணணி மனிதன் செய்மதிகளினை அசாதாரணமாக இயக்க முடியும் [ A computer man can make Satellites abnormally working] ஆகிய மூன்று விடயங்கள் சொல்லப்பட்டு இருந்தன.
ஜொள்ளின் சிற்றறிவுக்கு Elephant Tree என்பது என்ன என்றே தெரியாது. அப்படி ஓர் மரம் பூமியில் உண்மையில் இருக்கின்றதா என்று கூட தெரியாது. ஆனால், பேரறிவு அந்த மரத்தை தூய தத்துவ ஆராய்ச்சி மூலம் குறியீடுகளை பயன்படுத்தி கண்டுபிடித்து இருந்தது. ஆவணத்தின் ஆரம்பத்தில் சாரம்சமாக குறிப்பிடப்பட்டிருந்த ஒவ்வொரு விடயமும் தூய தத்துவ ஆராய்ச்சி மூலம் பல்வேறுவிதமான வினோதமான குறியீடுகளை பயன்படுத்தி விபரிக்கப்பட்டு இருந்தன.
ஆவணத்தின் இறுதிப்பகுதியில் “அவசரம்” - விளம்பரம் – “Emergency” – Advertisement என எழுதப்பட்டு, அதன்கீழ் “சிவநடனம்” – மாலை ஏழு மணிக்கு [காந்தருவ நாட்டு நேரம்] – காந்தருவம் நாட்டு அரச தொலைக்காட்சியில் “நேரஞ்சல்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆவணத்தில் இறுதியாக “with love” என எழுதப்பட்டு, ஓர் ஆவணக்கோப்பில் அம்மத உருவாக்குனரின் நாமமும், மற்றைய ஆவணக்கோப்பில் அம்மதத்தினை சேர்ந்த ஓர் பிரபல ஞானியின் பெயரும், மூன்றாவது ஆவணத்தில் கடவுள் என்றும் எழுதப்பட்டு இருந்தன. ஒவ்வொரு ஆவணமும் சுமார் நான்கு அல்லது ஐந்து கடதாசிகளை உள்ளடக்கி இருந்தது.
இவற்றுடன், ஆவணத்தில் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டவர் விபரம் என ஜொள்ளின் பெயரும் குறிப்பிடப்பட்டு, அவனது பல்கலைக்கழக விபரம், அவனது பல்கலைக்கழக அடையாள இலக்கம் போன்ற தகவல்களும் வழங்கப்பட்டு இருந்தன. ஜொள்ளை சுதந்திரமாக கருத்துக்கள் கூற அனுமதிக்குமாறும் அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
If you kindly allow him to tell his ideas, he can make the whole world happy in 24hours.
ஜொள்ளின் சிற்றறிவுகூட மாற்று சிந்தனையின்றி இப்போது பேரறிவுடன் ஐக்கியமாகி இயங்கத் தொடங்கியது. இரண்டு அறிவுகளும் ஒரே பாதையில் நேர்கோட்டில் சமாந்தரமாக செல்லத்தொடங்கின என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
இப்போது காலை ஐந்து மணி இருக்கும். ஜொள்ளின் வீட்டில் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். காந்தருவம் நாட்டின் தலைநகரிலும் மயான அமைதி நிலவியது. மின்னல் வேகத்தில் ஜொள் அந்தக்காரியத்தை செய்து முடித்தான். முதலாவதாக தனது வீட்டுக்கு மிக அருகில் இருந்த ஓர் மத தலத்தில் ஓர் ஆவணத்தை சமர்ப்பித்து இருந்தான். அடுத்த ஆவணம் இன்னோர் மதத்தை சேர்ந்த தலத்தில் புனிதனின் பாதக் கமலங்களில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. மூன்றாவது ஆவணம் சற்று தொலைவில் இருந்த மூன்றாவது சமயத்தை சேர்ந்த ஓர் வழிபாட்டு தலத்தின் கர்ப்பக்கிரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. மூன்றாவது ஆவணத்தை சமர்ப்பித்தபின் ஜொள் அந்த வழிபாட்டு தலத்தில் தானும் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காக ஓரிடத்தில் போய் ஓரமாக உட்கார்ந்து கொண்டான்.
ஆலயத்தில் காலை வழிபாட்டை நடாத்துவதற்காக வந்த சுவாமிகள் கர்ப்பக்கிரகத்தில் ஜொள் சமர்ப்பித்து இருந்த ஆவணக்கோப்பை கண்டுவிட்டு, மிகுந்த ஆச்சரியத்துடன், மகிழ்ச்சியுடன் உடனடியாக தரையில் அட்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு, பின்னர் ஓடிச்சென்று அந்த ஆவணத்தை எடுத்து இரண்டு கண்களிலும் ஒற்றி முத்தம் இட்டபின்னர், அதை இன்னோர் இடத்தில் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துவிட்டு வழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினார். சுவாமிகள் அந்த ஆவணத்தை கர்ப்பக்கிரகத்தில் கொண்டு வந்து வைத்தது யார் என்று ஆராயவும் இல்லை, ஜொள்ளை திரும்பி பார்க்கவும் இல்லை. சுவாமிகள் தனது வசீகரமான குரலில் வாத்திய இசையுடன் மிகவும் இனிமையாகப் பாடினார். ஆலயம் எங்கும் தெய்வீக ஒளி வீசியது. ஜொள் சிறிதுநேரம் தானும் பிரார்த்தனையில் கலந்துவிட்டு, அது நிறைவடைந்ததும் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஆலயத்தைவிட்டு நகரத்தொடங்கினான்.
ஜொள்ளிற்கு எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும், எதை முதலில் செய்யவேண்டும், எதை அடுத்ததாக செய்யவேண்டும், எந்தப் பாதையால் போகவேண்டும், எந்தப் பாதையால் வரவேண்டும், எவருடன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், எப்படி சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒருவரும் சொல்லிக் கொடுக்கவில்லை. அவனது பேரறிவு அவனை சரியான பாதையில் வழிநடாத்தியது. எங்காவது ஓர் இடத்தில் இம்மியளவு பிசகி இருந்தாலும் ஜொள்ளிற்கு மரணம் சம்பவித்து இருக்கும். ஆனால், சிறு தவறும் நிகழாதபடி ஜொள்ளின் ஒவ்வொரு அசைவும் அழகாக, கனகச்சிதமாக, துல்லியமான முறையில் நிகழ்ந்து கொண்டு இருந்தது.
அரச தலைவர் பற்றீசா, கலாநிதி ரசல் ஆகியோருடன் தனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதற்கு முன்னமே “நற்செய்தி” என்று தலைப்பிடப்பட்ட மூன்று ஆவணங்களும் வெவ்வேறு மூன்று மத வழிபாட்டு தலங்களில் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன. ஒவ்வோர் மதத்தினையும் சேர்ந்த வழிகாட்டிகளாக இருக்கக்கூடியவர்கள் எவ்வாறானதொரு உலகத்தை தரிசித்தர்களோ அதே உலகத்தை தானும் தரிசித்துள்ளதாக ஜொள் உறுதியாக நம்பினான்.
சரி, ஜொள் எந்த மதத்தை சேர்ந்தவன்? அவன் எந்த மதத்திற்கு ஆதரவானவன்? அவன் ஏன் மத வழிபாட்டு தலங்களிற்கு சென்று தனது சிந்தனைகளை சமர்ப்பித்தான்? அவனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றதா? அவனுக்கு தனது நடவடிக்கைகள் உயிர் ஆபத்தானவை என்று தெரியவில்லையா? தனது செயற்பாடுகள் மூலம் அவனுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள், பிரச்சனைகள் பற்றி ஜொள்ளுக்கு ஏதாவது அக்கறை இருந்ததா?
ஒன்றிற்கு ஒன்று சமாந்தரமாக சென்ற ஜொள்ளின் சிற்றறிவும், பேரறிவும் காந்தருவம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே அவனது ஒவ்வொரு நடவடிக்கைகளும் அமைகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டன. தன்னை யார் என்றும், தனது அடையாளம், பல்கலைக்கழக விபரங்களையும் ஒவ்வொரு சிந்தனைப் பரிமாற்றத்தின் போதும் வெளிப்படையாக ஜொள் கூறி இருந்தான்.
வெவ்வேறு மத பீடாதிபதிகள், காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசா, உலகறிந்த அறிஞர் கலாநிதி ரசல் ஆகியோருடன் இப்போது ஜொள்ளின் பேரறிவு தொடர்பை ஏற்படுத்திவிட்டது. இனி நடைபெறப்போவது என்ன?
J Zero L Org