ஓர் மனிதனின் சில நாட்கள்
கற்பனை விஞ்ஞான கதை

J Zero L Org

Browse: Home / Tamil / [ 3 ]

அத்தியாயம்

[ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]

[ 3 ]

By முரளி சிவா on 01/27/2010

அன்று காலை ஜொள் மீண்டும் தனது தகவல்களை காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவுக்கு அனுப்புவதற்காக தகவல் பரிவர்த்தனை நிலையத்திற்கு சென்றான். ஜொள் தலைவர் பற்றீசாவை முதன்முதலாக தொடர்புகொண்டு சில நாட்களே ஆகி இருக்கலாம். ஒவ்வொரு தடவையும் தொலைநகல் ஊடாக பற்றீசாவை தொடர்பு கொண்டபோது மீண்டும் மீண்டும் தான் உடனடியாக அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்று அவன் கேட்டு இருந்தான். ஏற்கனவே அவன் காந்தருவம் நாட்டின் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நேரடியாகச்சென்று பற்றீசாவை சந்திப்பதற்கு முயற்சி செய்து இருந்தான். ஜொள்ளின் பேரறிவுக்கு காந்தருவம் நாட்டினை பல அழிவுகள் சூழ்ந்து இருப்பது தெரிந்தது. இதை தடுப்பதற்கு மிக வேகமாக பல காரியங்களை செய்யவேண்டி இருந்தது.

அன்று பற்றீசாவின் அரச அலுவலகத்திற்கு மீண்டும் தொலைநகலை அனுப்பியபின் ஜொள் தகவல் பரிவர்த்தனை நிலையத்தைவிட்டு வெளியே வந்தான். அப்போது, அவன் அருகாக மிக மெதுவாக ஓர் காவல்துறை வாகனம் வந்தது. அதனுள் ஐந்து, ஆறு சீருடை தரித்த காவல்துறையினர் உட்கார்ந்து இருந்தனர். அந்நேரத்தில் திடீரென ஜொள்ளின் சிற்றறிவு யாரையோ கண்டு தடுமாறிவிட்டது. எனினும், பேரறிவோ காவல்துறை வாகனத்தின் பின்பக்கத்தில் மிகவும் சாதாரண உடை அணிந்து உட்கார்ந்து இருந்த பற்றீசாவை தனது புலன்களை கூர்மைப்படுத்தி மிகவும் உன்னிப்பாக அவதானித்தது.

ஜொள் பற்றீசாவை பார்த்தபோது பற்றீசா ஜொள்ளை நேரடியாக முகம் கொடுத்து பார்க்கவில்லை. ஆனால், பற்றீசாவின் முகத்தில் மிக்க மகிழ்ச்சி தெரிந்தது. அப்படியானால்? ஜொள்ளின் அறிவியல் சிந்தனைகளுக்கு அரச தலைவர் பற்றீசாவிடம் இருந்து கிடைத்த உத்தியோகபூர்வ அங்கீகாரமாக அந்த நிகழ்வை ஜொள்ளின் பேரறிவு புரிந்துகொண்டது. அரச தலைவர் பற்றீசா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பற்றீசா இவ்வளவு சாதாரணமாக சாமானியர்களைப் போன்று தோற்றம் அளித்தது ஜொள்ளின் சிற்றறிவுக்கு சற்று குழப்பமாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களிற்காக பற்றீசா அவ்வாறு சாதாரண தோற்றத்தில் ஜொள் முன் தோன்றி இருக்கலாம்.

ஜொள்ளின் பேரறிவு இப்போது காந்தருவம் நாட்டினை தனது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபடத்தொடங்கியது. கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது என்றால்? ஆம், காந்தருவம் நாட்டில் உள்ள முக்கிய மூன்று இனங்களுக்கிடையே காலம், காலமாக நிலவுகின்ற பூசல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு காந்தருவம் நாட்டில் நிரந்தர அமைதி உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், நிரந்த அமைதியுடனும் வாழவேண்டும்.

ஜொள்ளினால் இதை எப்படி சாதிக்க முடியும்? அவனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? ஆகக்குறைந்தது காந்தருவம் நாட்டில் நடைபெற்ற ஏதாவது ஓர் தேர்தலில் அவன் வாக்களிப்பு செய்து இருக்கின்றானா? ஆகக்குறைந்தது யாராவது ஓர் அரசியல்வாதியுடன் ஜொள்ளிற்கு அறிமுகம் இருக்கின்றதா? சரி, ஏதாவது ஓர் அரசியல் கட்சியுடனாவது ஜொள்ளிற்கு தொடர்பு இருக்கின்றதா? காந்தருவம் நாட்டு பாராளுமன்றத்தில் சரியாக எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்றாவது அவனுக்கு தெரியுமா? எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு பதில்; இல்லை!

ஜொள்ளின் பேரறிவு இவற்றை பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மின்னல் வேகத்தில் செயற்படத் தொடங்கியது. அறிவியல் ரீதியாக காந்தருவம் நாட்டின் பிரச்சனைகளை அலசி ஆராயத் தொடங்கியது. வண்டில் வண்டிலாக தலைவர் பற்றீசாவுக்கு ஜொள்ளிடம் இருந்து தொலைநகல்கள் பறந்தன. ஒவ்வொரு தொலைநகலிலும் காந்தருவம் நாடு பற்றி பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டு இருந்தன.

அரச தலைவர் பற்றீசாவுக்கு அனுப்பப்பட்ட ஜொள்ளின் முதலாவது தொலைநகல் ஏறக்குறைய இவ்வாறு இருந்தது:

Dear Madam,

I want to meet you immediately. I have just invented new space science [Dr.Russell has to approve it]. If you agree with me, I can help you solve the ethnic problems in Kaantharuvam without any troubles.

Sincerely,

j0l

Applied / Educational Psychologist

phone#                                                                              5.00p.m

தொலைநகல்கள் ஒவ்வொன்றும் மிகவும் சுவாரசியமாகவும், சினேகபூர்வமான முறையிலும், அத்துடன் நல்ல நகைச்சுவையாகவும் எழுதப்பட்டு இருந்தன. அரச தலைவர் பற்றீசா ஏற்கனவே ஜொள்ளிற்கு மிகவும் அறிமுகம் ஆனவர் போன்று – கிட்டத்தட்ட ஜொள்ளின் ஓர் நெருங்கிய தோழி போல் உருவகம் செய்யப்பட்டு தொலைநகல்கள் வரையப்பட்டு இருந்தன.

ஜொள் பற்றீசாவை நேரடியாக சந்தித்து உரையாடுவதையே விரும்பினான். எனவே, அதற்காக கடுமையான முயற்சிகள் மேற்கொண்டான். அவன் பற்றீசாவை சந்திப்பதற்கு மேற்கொண்ட அணுகுமுறைகள் வித்தியாசமாக இருந்தன. ஜொள் அரசியல்வாதிகளின் உதவிகளையோ அல்லது அரசியல் கட்சிகளின் உதவிகளையோ இதற்காக நாடவில்லை. ஏன், தனது தாய்மொழியை பேசுகின்ற எவரது உதவியையும்கூட நாடவில்லை. அவ்வாறாயின், என்ன செய்தான்? ஜொள்ளின் பேரறிவுக்கு ஒவ்வொருவரும் மனிதர்களாக மட்டுமே காணப்பட்டார்கள். அங்கு இனம் இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை. மனிதம் மட்டுமே இருந்தது.

முதலில் நேரடியாக காந்தருவம் நாட்டின் தலைநகரில் உள்ள ஓர் முக்கிய காவல்நிலையத்திற்கு சென்று காவல்நிலைய பொறுப்பதிகாரியுடன் ஜொள் உரையாடினான். தான் அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்றை செய்துள்ளதாகவும் இதுவிடயமாக உடனடியாக காந்தருவம் நாட்டு அரச தலைவர் பற்றீசாவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் காவல்நிலைய பொறுப்பதிகாரியிடம் கூறினான்.

காவல்துறை அதிகாரியோ ஜொள் வந்தவிடயத்தை அறிந்த பின்னர் பித்துப்பிடித்தவர் போலாகிவிட்டார். அருகில் நின்ற இதர காவல்துறை அதிகாரிகளை அழைத்து “ஜொள் அரச தலைவர் பற்றீசாவை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கூறுகின்றான்” என்று தெரிவித்து விசனத்துடன் தலையை அடித்துக்கொண்டார். அவரைப்பொறுத்தவரையில் அரச தலைவர் பற்றீசா ஜொள் சந்திக்க முடியாத ஓர் நபர்.

காவல்துறை அதிகாரியின் பொறுப்பற்ற பதில் ஜொள்ளிற்கு கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியது. காவல் நிலையத்தைவிட்டு வெளியே வந்த ஜொள் உரத்த குரலில் கடும் சீற்றத்துடன் கத்தினான். ஜொள்ளின் பேரறிவைப் பொறுத்தவரையில் அரச தலைவர் பற்றீசா மற்றவர்களைப்போல் ஓர் மனிதர். காந்தருவம் நாட்டில் நிரந்த அமைதியை ஏற்படுத்துவதற்கு தலைவர் பற்றீசாவின் உதவி ஜொள்ளிற்கு உடனடியாக தேவைப்பட்டது.

இதன்பின்னரே அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஜொள் சென்றான். வலையம், வலையமாக பலப்பல பாதுகாப்பு வேலிகள் காணப்பட்டன. ஆயுதங்களுடன் பாதுகாப்பு வீரர்கள் சுற்றுச்சூழல் எங்கனும் காணப்பட்டனர். ஆனால், ஜொள்ளிற்கு துளியளவேனும் பயம் ஏற்படவில்லை. பற்றீசாவை உடனடியாக சந்திக்கவேண்டும், காந்தருவம் நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்பதே அவனது குறியாக இருந்தது.

ஒவ்வொரு பாதுகாப்பு பரிசோதனை நிலையத்திலும் ஜொள் தன்னை ஓர் பிரயோக / கல்விசார் மனவியலாளன் என்றும், தான் ஓர் அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளதாகவும், அரச தலைவர் பற்றீசாவை சந்திப்பதற்காக தான் வந்திருப்பதாகவும் கூறினான். ஆயுதம் தரித்த, தரிக்காத பாதுகாப்பு படையினருடனான அவனது உரையாடல்கள் மிகவும் சினேகபூர்வமான முறையில் அமைந்து இருந்தன. காந்தருவம் நாட்டின் பிரதான மொழியில் உரையாடாமல் ஆரம்பம் முதல், இறுதிவரை அனைவருடனும் ஜொள் சர்வதேச மொழியிலேயே உரையாடல் செய்தான். ஜொள் தான் ஓர் பல்கலைக்கழக மாணவன் என்பதையும் கூறினான். அவனது பல்கலைக்கழக அடையாள அட்டை ஜொள்ளின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏனைய மாணவர்களிடம் காணப்பட்டது போன்றது அல்லாத விசேடமான ஓர் அடையாள அட்டையாக காணப்பட்டது. அது ஜொள்ளின் பேரறிவின் விசேட தயாரிப்பு.

கலாநிதி ரசலிற்கு எவ்வாறான விளக்கத்தை கொடுத்தானோ, தொலைநகல்கள் ஊடாக அரச தலைவர் பற்றீசாவுக்கு எவ்வாறான விளக்கத்தை கொடுத்தானோ அதே விளக்கத்தையே தான் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஜொள் கொடுத்தான். மனிதர்களில் அவன் ஏற்றத்தாழ்வு பார்க்கவில்லை. அனைவருக்கும் தனது அறிவியல் விளக்கங்களை புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல், அறிவு இருப்பதாக ஜொள் உறுதியாக நம்பினான். ஜொள்ளின் விரிவான விளக்கங்களை கேட்ட ஒவ்வொரு ஆயுதம் தாங்கிய படைச்சிப்பாயும், காவல்துறையினரும் அவனுக்கு எதுவித இடையூறும், சிரமமும் கொடுக்கவில்லை.

ஒவ்வொரு பாதுகாப்பு கடவையிலும் ஆயுதம் தாங்கி காவல் கடமையில் நின்ற ஒவ்வொரு, ஒவ்வொரு தனித்தனி படைச்சிப்பாய்களாக அணுகி ஜொள் அவர்களுக்கு அறிவியல் விளக்கம் கொடுத்தான். “காந்தருவம் நாட்டின் அரச தலைவரை சந்திப்பதற்காக சென்ற அவன் அந்நாட்டின் யதார்த்த அரசாங்கத்தை நேரில் தரிசித்தான், யதார்த்த அரசாங்கத்துடன் நேரடியாக உரையாடல் செய்தான்” என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அரச தலைவர் பற்றீசாவின் உத்தியோகபூர்வ இல்லத்தினுள் நுழைந்த பிற்பாடே ஜொள்ளின் சிற்றறிவுக்கு காந்தருவம் நாட்டின் அரச நிர்வாகம் எப்படி இயங்குகின்றது என்ற உண்மை விளங்கியது.  ஜொள்ளின் பேரறிவு காந்தருவம் நாட்டில் எப்படி நிரந்தர அமைதியை ஏற்படுத்தலாம் என்று தொடர்ந்து ஆராயத்தொடங்கியது.

ஜொள் காந்தருவம் நாட்டினை காப்பாற்றும் தனது முயற்சியில் வெற்றி பெற்றானா? அங்கு நிரந்தர அமைதி, மகிழ்ச்சி தோன்றுவதற்கு எவ்வாறு உதவி செய்தான்?

Posted in Tamil | Tagged மூன்று

அத்தியாயம்

[ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]
« [ 2 ] [ 4 ] »

© 2010 J Zero L Org | பின்னூட்டல்