ஓர் மனிதனின் சில நாட்கள்
கற்பனை விஞ்ஞான கதை

J Zero L Org

Browse: Home / Tamil / [ 2 ]

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]

[ 2 ]

By Author on 01/26/2010

ஜொள் கலாநிதி ரசலிடம் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தான். ஆயினும், அவனது பேரறிவின் வேகமும், வீச்சும் கலாநிதி ரசலின் கட்டுப்பாட்டின்கீழ் ஜொள்ளை இயங்க விடவில்லை. மாறாக, கலாநிதி ரசலை ஜொள்ளின் பேரறிவு கட்டுப்படுத்தத் தொடங்கியது.

தனது கண்டறிதல்களை நிரூபிக்க ஜொள் E = mc2 எனப்படுகின்ற பிரபலமான விஞ்ஞான சூத்திரத்தை தேர்ந்தெடுத்தமைக்கு பல காரணங்கள் இருந்தன.

உலகெங்கும் அறிஞர்களிடையே அறியப்பட்ட E = mc2 எனப்படும் பெளதிகவியல் சூத்திரம் மனிதநாகரீக வளர்ச்சியின் படிமுறையில் முக்கியமானதொரு மைக்கல்லாக விளங்கியது. அத்துடன், அழிவுக்கு காரணமாக அமையக்கூடிய அணுகுண்டு பூமியில் உருவாகியதற்கான தர்க்கரீதியான எடுகோலாகவும் அந்த அறிவியல் சூத்திரம் அமைந்தது.

எது அழிவைத் தரக்கூடியதோ, எது ஆபத்தானதோ அதையே ஆக்கபூர்வமான வகையில், மனிதர்களுக்கான பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தவேண்டும் என ஜொள் தீர்மானித்தான். குறிப்பிட்ட E = mc2 சூத்திரத்தை தனது கண்டறிதல்களில் பிரயோகிக்கும்போது தான் கூறவிளைகின்ற சிந்தனைகளை இலகுவாக அறிஞர்களிடையே, மக்களிடையே எடுத்துச் செல்லமுடியும் என்றும் ஜொள் நம்பினான்.

ஜொள் ஓர் பெளதிகவியல் ஆராய்ச்சியாளன் அல்ல. காந்தருவம் நாட்டில் வருடாவருடம் நடைபெறும் பல்கலைக்கழக அனுமதிக்கான தேர்வில் ஜொள் முதல்தடவை பெளதிகவியல் பாடத்தில் சித்திபெறவில்லை.  இப்படிப்பட்டவன், பாடசாலைக் கல்வி பூர்த்தி அடைந்து சில வருடங்களின் பின்னர் E = mc2 எனப்படுகின்ற பிரபல சூத்திரத்தை உருவாக்கிய அறிஞனால் நிரூபிக்க முடியாத விடயங்களை தன்னால் நிரூபிக்க முடியும் என்று கூறியதும், அந்த அறிஞன் கூறிய, மற்றவர்களால் விளங்கிக்கொள்ளப்பட முடியாத பல தத்துவங்களை தன்னால் விளங்கிக்கொள்ள முடியும் என்று கூறியதும் கலாநிதி ரசலை மாத்திரம் அல்ல, காந்தருவம் நாட்டின் அரச தலைவர் பற்றீசாவையும், இன்னும் பலரையும் நம்பமுடியாத ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. அப்படி இருந்தவன் எப்படி இப்படி மாறினான்? அவனுக்கு இந்த அறிவு எவ்வாறு கிடைத்தது? இவனுக்கு என்ன பித்து பிடித்து விட்டதா? ஏதாவது பிரமையில் உளறுகின்றானா?

எல்லாம் இயற்கையின் திருவிளையாடல்களே. பிறப்பில் ஜொள் ஓர் உடல் உபாதையுடன் படைக்கப்பட்டான். மேலும், அவன் அரசியல் சமநிலையற்ற குழப்பம் மிகுந்த நாடொன்றில் பிறந்தான். இந்த இரண்டு காரணிகளும் ஜொள்ளின் வாழ்க்கைப் பயணத்தின் பாதையினை தெரிவு செய்வதில் பிரதான பங்கு வகித்தன. உடல் உபாதையுடன் ஜொள் பிறந்து இருக்காதுவிடின், அதேபோன்று அரசியல் சமநிலையற்ற குழப்பம் மிகுந்த நாடொன்றிலும் ஜொள் பிறந்து இருக்காதுவிடின் நிச்சயம் அப்படியானதொரு ஆச்சரியத்தை, அதிர்ச்சியை கலாநிதி ரசலிற்கும், காந்தருவம் நாட்டின் அரச தலைவர் பற்றீசாவுக்கும், இன்னும் பலருக்கும் அவன் கொடுத்து இருக்கமாட்டான்.

கலாநிதி ரசலை சந்திக்க முன்னர் பல வருடங்கள் ஜொள் மிகத்தீவிரமான, மிகக்கடுமையான தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான். அவன் தன்னையே ஓர் பரிசோதனைப் பொருளாக்கி பல வருடங்கள் வெவ்வேறு வகையான தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான். ஜொள்ளின் தத்துவ ஆராய்ச்சிகள் வெறும் தர்க்கரீதியாக மட்டும் அல்லாது நடைமுறை வாழ்வில் பிரயோகம் செய்யப்படுவனவாகவும் காணப்பட்டன. அவன் மற்றவர்களுக்கு எதுவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என்பதில் அக்கறையாக இருந்தான். ஆனால், எதுவித தயவு, தாட்சணியமும் இன்றி தன்னை வருத்திக்கொண்டான். பலவிதமான ஆபத்தான பரிசோதனைகளை தன்னுள் செய்து பார்த்தான்.  வார்த்தைகளில் விபரிக்கமுடியாத பலவித துன்பங்களை அவன் அடைந்தான்.

அவனது வாழ்வில் மணித்தியாலங்கள், மாதங்கள், வருடங்கள் ஆழ்ந்த சிந்தனைகளில் கழிந்து போயின. ஜொள்ளின் சிந்தனைகள் வினாக்களின் அடிப்படையில் அமைந்தன. தனது ஐம்புலன்களிலும் உணர்கின்ற ஆயிரக்கணக்கான விடயங்கள் சம்மந்தமாக ஜொள் தினமும் வினாக்களினை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் சிந்தித்தான்.  கைவினையாகவே சிறிய கையேடுகள் தயாரித்து நேரத்திற்கு நேரம் தனக்குள் எழுகின்ற வினாக்களை குறித்தும் வைத்தான். அடிக்கடி வினாக்களை மீள்பார்வை செய்தான்.

ஓர் வினாவுக்குரிய பதிலை கண்டுபிடிக்கும்போது அதையும் ஓர் வினாவாகவே ஜொள் தனது கையேட்டில் குறித்து வைத்தான். அவனைப் பொறுத்தவரையில், அவனது உலகத்தில் எதற்கும் விடைகள் இல்லை. எல்லாம் வினாக்களே; விடைகள் உட்பட!

ஜொள்ளின் கையேட்டில் சுவாரசியமான பல விடயங்கள் இருந்தன. ஓர் கையேட்டில் இப்படியோர் வினா தொடுக்கப்பட்டு இருந்தது:

கனவில் / கற்பனையில் பெறப்படுகின்ற மிகவும் நிம்மதியான / மகிழ்ச்சியான உணர்வு  அது நிஜத்தில் / நிகழ்வில் பெறப்படுவதற்கு தடையாக இருக்கும்? / தடையாக இருக்காது?

காலஞ் செல்லச் செல்ல ஜொள்ளின் கையேடுகள் ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி.., இவ்வாறு அவை எண்ணிக்கையில் வளரத்தொடங்கின. பல கையேடுகளை ஜொள் சில காலத்தின்பின் குப்பையில் எறிந்தான். ஒரு சிலவற்றை மட்டும் பாதுகாத்தான். தனது கையேடுகளை மற்றவர்களின் கண்களில் தென்படாதபடி பாதுகாப்பதில் அவன் மிக எச்சரிக்கையாக இருந்தான். பல கையேடுகளை தீயில் எரித்தான். பல கையேடுகளை நிலத்தில் புதைத்தான்.

ஜொள்ளின் தத்துவ ஆராய்ச்சிகள் பற்றி அவனது குடும்பத்தில் எவருக்கும் தெரியாது. சகல செயற்பாடுகளும் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்றன. அவனது குடும்பத்தினரின் பார்வைக்கு ஜொள் “பொன்னான நேரத்தை வீண்விரயம் செய்கின்ற ஓர் ஊக்கமற்ற சோம்பேறி மாடு போல் தென்பட்டான்” என்று கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும். ஜொள் வாழ்ந்த காந்தருவ நாட்டு சமூகம் சற்று வித்தியாசமாக சிந்திப்பவர்களை மட்டம்தட்டி, நையாண்டி செய்வதும் ஜொள் இவ்வாறு நடந்துகொண்டமைக்கு காரணமாக இருந்தது. தனது புதினமான செயற்பாடுகளை அவதானிக்கக்கூடிய மற்றவர்கள் அவனை “பைத்தியம்” என்று அவர்கள் வாயினால் கூறும்படி செய்வதற்கு ஜொள் விரும்பவில்லை. இதனால் தனது சிந்தனைகளை தனக்குள் மட்டும் வைத்துக் கொண்டான்.

தனது தத்துவ ஆராய்ச்சிகளில் ஜொள் இயலுமானவரை அந்தரங்கத்தை பாதுகாக்க முயற்சித்தான். ஜொள்ளின் அந்தரங்க உலகினுள் நுழைவதற்கு அவனது குடும்பத்தினருக்கு கூட ஜொள் அனுமதி கொடுக்கவில்லை. விளைவு?

அவன் காந்தருவம் நாட்டில் வருடாவருடம் வைக்கப்படுகின்ற பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சையில் பிரகாசிக்கவில்லை. அவனது குடும்பத்தினர், அவனது நண்பர்கள் உட்பட, அவனை நன்கு அறிந்த பலரும் இதனால் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர். ஜொள்ளும் கவலை அடைந்தான். தனது தத்துவ ஆராய்ச்சிகளில் அவன் உறுதியாக இருந்தாலும், ஊருடன் ஒத்து போகவேண்டிய நடைமுறை வாழ்வு தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் செல்கின்றதே என்கின்ற கவலை அவனை நாளும், பொழுதும் அரித்து எடுத்தது. இதனால், தனது குடும்பத்தினரை சமாதானப்படுத்துவதற்காக விரும்பியோ, விரும்பாமலோ ஜொள் பலவித காரியங்களை ஆற்றவேண்டிய அழுத்தம் எப்போதும் காணப்பட்டது.

எனினும், அனைத்து பாடங்களிலும் அதிதிறமைச் சித்திகள் பெற்று, உலகில் உள்ள ஓர் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றிற்கு புலமைப்பரிசில் பெற்று சென்று, அங்கு கல்விகற்று, அங்கு பல மேற்பார்வையாளர்களின் கட்டுப்பாட்டில் ஆராய்ச்சிகள் செய்து சாதிக்கமுடியாத பல விடயங்களை இன்னும் சில வருடங்களில் காந்தருவம் நாட்டிலேயே ஜொள் சாதிப்பான் என்று அப்போது அவனுக்கே தெரியாது. சிலவேளைகளில் கலாநிதி ரசலின் பேரறிவிற்கு மாத்திரம் தெரிந்து இருக்கக்கூடும்.

தினமும் இரவுகளில் உறங்காது நீண்டநேரம் விழித்திருந்து சிந்திப்பது ஜொள்ளிற்கு மிகவும் பிடித்து இருந்தது. கண்களை மூடியபடி சிந்தித்தான், கண்களை திறந்தபடி சிந்தித்தான், அசையாமல் சிந்தித்தான், அசைந்தபடி சிந்தித்தான். நீண்ட தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவாறு இயற்கையை இரசித்தபடி ஆழ்ந்த சிந்தனை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதும் ஜொள்ளிற்கு பிடித்து இருந்தது. இவ்வாறே, இரவுகளில் நீண்டநேரம் தனது வீட்டின் கூரை மேற்பகுதியில் படுத்திருந்து ஆகாயத்தை பார்த்தபடி ஆழமாக சிந்திப்பதும் ஜொள்ளிற்கு மிகவும் பிடித்து காணப்பட்டது.

வாழ்வின் ஓர் கட்டத்தில் தொடர்ச்சியான வெற்றுச் சிந்தனைகளால் பயனில்லை என்று அவனுக்கு தோன்றியது. அப்போது நடந்தது என்ன? வாழ்வில் அவன் சூனியத்தை உணர்ந்தபோது என்ன செய்தான்? அப்படியாயின், இனி எவ்வாறு இவன் வாழப்போகின்றான்? காந்தருவம் நாட்டில் இருந்து வெளிவருகின்ற ஓர் பிரபல செய்தி இதழ் ஜொள்ளை குறிகாட்டி இப்படி சொல்லாமல் சொல்லி இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கலாம்? இது உண்மையாக இருக்குமா? யதார்த்தத்தில் நடைபெற்று இருக்கக்கூடிய ஓர் நிகழ்வாக இருக்குமா? அல்லது வெறும் பிரமையா?

A little kid with a big kick!

Posted in Tamil | Tagged இரண்டு

அத்தியாயம்

[ 22 ][ 21 ][ 20 ][ 19 ][ 18 ][ 17 ][ 16 ][ 15 ][ 14 ][ 13 ][ 12 ][ 11 ][ 10 ][ 9 ][ 8 ][ 7 ][ 6 ][ 5 ][ 4 ][ 3 ][ 2 ][ 1 ][ அறிமுகவுரை ][ விளக்கவுரை ][ பின்னூட்டல் ][ ஆசிரியர் பற்றி ][ காப்புரிமை ][ எச்சரிக்கை ][ நன்றி நவிலல் ][ சமர்ப்பணம் ][ கடவுள் துணை ]
« [ 1 ] [ 3 ] »

© 2010 J Zero L Org | பின்னூட்டல்