அவன் எப்படி அங்கே போய்ச் சேர்ந்தான்? எப்படியோ போய்ச் சேர்ந்தான்! பசு கன்று ஈனுகின்றது, கன்றுக்குட்டிக்கு ஒருவரும் ஒன்றும் சொல்லிக் கொடுப்பது இல்லை, அது தானாகவே தாயின் மடியை கண்டறிந்து பால் பருகுகின்றது. இவனது நிலமையும் ஏறக்குறைய அவ்வாறானதே. சடப்பொருட்களின் அசைவுகள், தோற்றங்கள் செய்மதியூடாக நேரஞ்சல் செய்வதுபோல் அவனுக்குள் பலப்பல தகவல்களை அனுப்பின.
அவன் இப்போது நீண்ட, உயர்ந்த மதிற்சுவரினை உற்றுப் பார்த்தான். அங்கு “25” என தங்க முலாம் இடப்பட்ட அழகியதொரு இலக்கத்தகடு காட்சியளித்தது. அவனது சிற்றறிவு அவன் சரியான இடத்தில் நிற்பதை உறுதிப் படுத்திக்கொண்டது. அவனது பேரறிவு இலக்கம் இருபத்து ஐந்து என்பதை பலவாறாக கற்பனை செய்து பார்த்தது. சகலதும் சமநிலைபெறுவதற்கு அவன் இருபத்து ஐந்து வருடங்கள் காத்திருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டது. அப்படியாயின்..? அவன் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். எதற்காக?
தொடர்ந்து இலக்கை நோக்கி நடக்கத்தொடங்கினான். எது அவனது இலக்கு? கலாநிதி ரசலை அவன் உடனடியாக சந்திக்கவேண்டும் என்று அவனது சிற்றறிவும், பேரறிவும் சொல்லிக் கொண்டன. யார் கலாநிதி ரசல் என்று பார்க்க முன்னதாக அது என்ன சிற்றறிவு? பேரறிவு?
சாமானியனாக மற்றவர்களுடன் ஒன்றாக சேர்ந்து பூமிப்பந்தில் வாழ்வதற்கு உதவுவது சிற்றறிவின் பணி. இந்த உலகம், இயற்கை, சடப்பொருட்களுடன் மனிதன் அன்னியோன்னியமாக உறவாடுவதற்கு உதவுவது பேரறிவின் பணி.
சிற்றறிவை பேரறிவும், பேரறிவை சிற்றறிவும் கட்டுப்படுத்தின. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இந்த இரண்டு அறிவுகளும் சமநிலை பெறுவது மிகவும் அவசியம். ஆனால் அவனை இப்போது பேரறிவே அதிகளவில் கட்டுப்படுத்தியது, ஆதிக்கம் செய்தது. அவன், அவன் என்றால் யார்? சரி, ஓர் பெயர் வைப்போம். என்ன பெயர் வைக்கலாம்? இவனது பெயர் ஜொள்.
ஜொள் இப்போது கலாநிதி ரசலின் வீட்டினுள்ளே நுழையப் போகின்றான். வாயிலில் அகண்ட இரும்புக் கதவுகள் காணப்பட்டன. சாதாரணமாக புதியவர்கள் உள்ளே நுழைவதற்கு அஞ்சும் வகையில் அதன் அமைப்புக்கள் இருந்தன. தற்போதுதான் முதல் தடவையாக ஜொள் இங்கு வருகின்றான். ஆனால், ஏற்கனவே வந்து நன்கு பழகிய இடம்போல் ஓரமாக இருந்த சிறிய கதவை லாவகமாக திறந்தபடி எதுவித அச்சமும் இன்றி உள்ளே சென்றான்.
அங்கு, ஜொள்ளின் கண்களில் ஓர் அழகிய சிவப்பு நிறமான மகிழூர்தி தென்பட்டது. அது வாயிலை நோக்கியபடி, உடனடியாக வெளியே செல்வதற்கு ஆயத்தமான தோற்றத்தில் காணப்பட்டது. இந்த மகிழூர்தியில் கலாநிதி ரசலுடன் சேர்ந்து பயணம் செய்து, அவர்கள் வாழ்கின்ற “காந்தருவம்” நாட்டின் அரச தலைவர் பற்றீசாவை உடனடியாக சென்று சந்திக்கவேண்டும் என ஜொள்ளின் பேரறிவு சொல்லிக் கொண்டது. அத்துடன், காந்தருவம் நாட்டின் அரச தொலைக்காட்சியில் மாலை ஏழு மணிக்கு மூன்று மணி்த்தியாலங்கள் நேரடி நிகழ்ச்சி ஒன்றை கலாநிதி ரசல், அந்த நாட்டில் பிரபலமான ஓர் விளையாட்டு வீரன், மற்றும் ஓர் பிரபல வானொலி அறிவிப்பாளர் ஆகியோருடன் சேர்ந்து தொகுத்து வழங்கி காந்தருவம் நாட்டில் நிரந்தர அமைதியை உருவாக்கவேண்டும் என்பதும் பேரறிவின் சிந்தனையாக இருந்தது.
யார் இந்த கலாநிதி ரசல்? ஜொள் ஏன் அவரைத் தேடிப் போகவேண்டும்?
கலாநிதி ரசல் சுமார் நாற்பத்தொரு வருடங்களுக்கு முன்னர் காந்தருவம் நாட்டில் வந்து குடியேறிக் கொண்டார். காந்தருவம் நாட்டினை தனது நிரந்தர குடியிருப்பாக மாற்றிக்கொண்ட கலாநிதி ரசல் அங்கிருந்தவாறே உலகெங்கும் உள்ள அறிஞர்களுடன், கலைஞர்களுடன், ரசிகப் பெருமக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி தனது விஞ்ஞான ஆராய்ச்சிகள், கலைத்தேடல்கள், படைப்புக்களை மேற்கொண்டார். கலாநிதி ரசல் விஞ்ஞான புனைகதைகள் மூலம் பூமியின், மனித வாழ்க்கையின் எதிர்காலத்தை எதிர்வு கூறுவதில் சர்வதேசத்தில் பிரபலமானவராக விளங்கினார்.
ஜொள்ளின் சிற்றறிவுக்கும் அறிவியல் ரீதியாக அவன் எவற்றையோ கண்டறிந்து விட்டான் என்பது மிகவும் உறுதியாகப் பட்டது. ஆனால், அதை நிரூபிப்பதற்கு கலாநிதி ரசலின் உதவி ஜொள்ளிற்கு தேவைப்பட்டது. இந்த உலகத்தில் கலாநிதி ரசல் மட்டுமே தனது கண்டறிதலை அறிவுபூர்வமாக உறுதிப் படுத்தக்கூடியவர் என்று ஜொள் திடமாக நம்பினான்.
ஜொள் இப்போது கலாநிதி ரசலின் அலுவலகத்தின் முன்வாயிலில் நின்றான். வாயிற் கதவு வெளிப்புறமாக மற்றவர்களினால் திறக்கப்பட முடியாத வகையில் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டு காணப்பட்டது. வேறு பல பாதுகாப்பு வேலிகளும் காணப்பட்டன. வாயில் அருகில் அமைந்த தொலைபேசி ஜொள்ளின் கண்களில் தோன்றின. தொலைபேசிக்கு அருகில் விருந்தினர்கள் எவ்வாறு கலாநிதி ரசலின் செயலாளர்களுடன், மற்றும் கலாநிதி ரசலுடன் தொடர்பு கொள்வது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு காணப்பட்டது.
அறிவுறுத்தலில் கூறப்பட்டவாறே தொலைபேசியூடாக கலாநிதி ரசலுடன் இப்போது ஜொள் உரையாட முயற்சி செய்தான். மறுபுறத்தில் ரசல் அவர்களின் செயலாளர் குரல் கொடுத்தார். ஜொள் தொலைபேசியின் ஊடாக இவ்வாறு சொன்னான்:
Hello, I am j0l. I have just invented new space science. That is why satellites are working abnormally now. I want to meet Dr. Russell immediately.
காந்தருவம் நாட்டின் அயல்நாடு அண்மையில் விண்ணுக்கு ஏவிய செய்மதி அது செல்லவேண்டிய சரியான பாதையில் இருந்து விலகியமையும் ஜொள் அவ்வாறு கூறியதற்கு காரணமானது. செயலாளர் இப்போது தொலைபேசி இணைப்பை கலாநிதி ரசலிற்கு பரிமாற்றம் செய்தார். ஜொள் கலாநிதி ரசலிடம் இவ்வாறு கூறினான்.
Sir, I have just invented new space science. I want to meet you immediately.
கலாநிதி ரசல் ஜொள்ளுடன் உரையாட முற்பட்டபோது அவரது குரல் குழந்தைகளின் குரல் போல் மிகவும் மென்மையாக காணப்பட்டது. மிகவும் ஆறுதலாக மென்மையாக தொலைபேசியூடாக ஜொள்ளிடம் எதையோ முணுமுணுத்தவரிடம் இருந்து திடீரென எதுவித பதிலும் வரவில்லை.
ஜொள் கலாநிதி ரசலுடன் தொடர்ந்து உரையாட முயற்சி செய்தான். மீண்டும் தான் ஏற்கனவே கூறியதையே கூறினான். அப்போது, கலாநிதி ரசலின் இரண்டு செயலாளர்கள் மேல்மாடி அலுவலக அறையில் இருந்து ஜொள்ளை நோக்கி வேகமாக பதற்றத்துடன் கீழே ஓடி வந்தார்கள். கலாநிதி ரசல் திடீரென சுகவீனம் அடைந்து விட்டதாக ஜொள்ளிடம் பதற்றத்துடன் கூறினார்கள்.
ஜொள் கலாநிதி ரசலுடன் உரையாடத் தொடங்கியதும் கலாநிதி ரசல் திடீரென தனது சுயநினைவை இழந்து விட்டார். கலாநிதி ரசல் ஏன் சுயநினைவு இழந்தார் என்று ஜொள்ளின் சிற்றறிவுக்கு புரியவில்லை, பேரறிவோ அமைதியை கடைப்பிடித்தது. ஜொள் தான் வந்த விடயம் பற்றி செயலாளர்களிடம் கூறினான். கலாநிதி ரசலின் செயலாளர்கள் இப்போது ஜொள்ளை பயபக்தியுடன் மேல்மாடி அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
கலாநிதி ரசலின் அலுவலகம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது. அவர் கடந்த எழுபத்து ஒன்பது ஆண்டுகளில் உலகெங்கும் இருந்து பெற்ற பாராட்டுப் பத்திரங்கள், பரிசுகள், பதக்கங்கள். நற்சான்றிதழ்கள், புகைப்படங்கள் அனைத்தும் வரிசையாக அலுவலகத்தில் விருந்தினர் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. உலகில் தற்போது உயிருடன் வாழ்கின்ற முக்கியமான மனிதர்களில் கலாநிதி ரசலும் ஒருவர் என்பதை அவரது அலுவலக அறை ஜொள்ளிற்கு சொல்லாமல் சொன்னது.
தற்போது, ஜொள் கலாநிதி ரசலின் செயலாளர்களிடம் கேள்விக் கணைகளை தொடுக்கத் தொடங்கினான். கேள்விக் கணைகள் என்பதைவிட ஓர் குற்றப் புலனாய்வு அதிகாரியின் விசாரணைகள் என்பது போல் அவர்களுடனான ஜொள்ளின் உரையாடல் அமைந்தது. கலாநிதி ரசல் ஏன் காந்தருவம் நாட்டிற்கு வந்தார், ஏன் இங்கு தொடர்ந்து தங்கியுள்ளார் என்பன போன்ற பல வினாக்களை ஜொள் தொடுத்தான்.
செயலாளர்களில் ஒருவர் சற்று இளம் பிராயத்தவராகவும், மற்றையவர் நடுத்தர வயதினராகவும் விளங்கினார்கள். கலாநிதி ரசலை ஜொள் நேரடியாக முகம் கொடுத்து காணவில்லையாயினும், அவர் பக்கத்து அறையில் இருந்து அலுவலகத்தின் பிரதான அறையில் நடப்பவற்றை அவதானித்துக் கொண்டார்.
செயலாளர்களில் ஒருவர் மட்டுமே ஜொள்ளுடன் தற்சமயம் உரையாடலில் கலந்து கொண்டார். ஜொள் தனக்கு ஓர் கடதாசியும், எழுதுகோலும் தருமாறு கேட்டான். செயலாளர் உடனடியாகவே அவனுக்கு ஓர் வெள்ளைக் கடதாசியும், எழுதுகோலும் கொடுத்தார்.
ஜொள் கிடுகிடுவென கடதாசியின் முன்பக்கமும், பின்பக்கமுமாக கிட்டத்தட்ட கீழ் உள்ளதுபோல் எழுதினான். அவன் எழுதினான் என்பதைவிட அவனது பேரறிவு அதை எழுதியது என கூறுவது பொருத்தமாக இருக்கும்.
சுமார் ஒரு ஒன்று, இரண்டு நிமிடங்களில் சுருக்கமாக தனது கண்டறிதலின் சாரம்சத்தை எழுதி கலாநிதி ரசலின் செயலாளரிடம் காண்பித்தான். செயலாளர் அதை முன்னும், பின்னும் பார்த்துவிட்டு தனக்கு கலைமாணி பட்டமே உள்ளதாகவும், விஞ்ஞான சூத்திரங்களை புரிந்துகொள்ளக்கூடிய அறிவு தனக்கு இல்லையென்றும் ஜொள்ளிடம் கூறினார்.
மேலே காண்பிக்கப்பட்ட விடயங்கள் தவிர வேறு ஓர் விடயம் பற்றியும் ஜொள் கடதாசியில் எழுதினான்.
கலாநிதி ரசல் தற்போது நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும், அவர் குணம் அடைவதற்கு செய்மதிகள் கலாநிதி ரசல் பற்றி கதைகள் எழுதவேண்டும் என்றும் கூறினான்.
ஜொள் தனது கண்டுபிடிப்பை இரண்டு விதமான பெயர்கள் கொண்டு அழைத்தான். “நேர்கோட்டு விதி” – “Straight Line Law” என்றும், “Law for Spring” என்றும் அதற்கு பெயர்கள் வைத்தான். இரண்டு பெயர்களும் ஏறக்குறைய ஒன்றுடன் ஒன்று தொடர்புபடினும், அத்துடன் முதலாவது பெயர் அறிவியல், விஞ்ஞானத்துடன் சம்மந்தப்பட்ட பெயராக அமையினும், அவன் “Law for Spring” என இரண்டாவது பெயரை வைத்ததற்கு ஓர் காரணம் காணப்பட்டது.
“Law for Spring” என்பதன் அர்த்தம் ஜொள்ளைப் பொறுத்தவரையில் பொதுப்படையாக “மனிதர்கள் பூமியில் அமைதியாகவும், ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குரிய விதி” என்பதாகவே அமைந்தது. ஜொள் “நேர்கோட்டு விதி” அறிவியல் ரீதியாக அங்கீகாரம் பெறுவதைவிட, “Law for Spring” விஞ்ஞான ரீதியாக உறுதிப் படுத்தப்படவேண்டும், அங்கீகாரம் பெறவேண்டும் என்பதையே அதிகம் விரும்பினான்.
மனித வாழ்வை சூத்திரம் மூலம் வரையறுக்க முடியுமா?
தான் எழுதிய கடதாசியை கலாநிதி ரசலிடம் காண்பிக்குமாறும், மீண்டும் மறுநாள் வருவதாகவும் செயலாளரிடம் ஜொள் கூறிவிட்டு தனது அலுவலகம் நோக்கி புறப்படுவதற்கு தயாராகினான்.
கடதாசியின் பின் பக்கத்தில் அடியில் ஏறக்குறைய இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது:
Get well soon! Good luck!
with love,
j0l
Applied / Educational Psychologist
Home Address,
University ID, Info
ஜொள்ளிற்கும் பிரத்தியேக அலுவலகம் உள்ளதா?
எங்கே?
அங்கு அவன் என்ன செய்கின்றான்?


J Zero L Org