வாகனங்கள் தெருவில் செல்கின்றன. சந்திகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சைகைவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருக்கின்றன. சிவப்பு, பச்சை என ஒளிச்சைகைகள் மாறிக்கொண்டு இருக்கின்றன. வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் வீதி ஒழுங்கு நடைமுறைகளிற்கு ஏற்ப சைகைகளை சரியாக உள்வாங்கி பாதுகாப்பான முறையில் நகர்ந்து செல்கின்றனர்.
இப்போது தெருவில் வாகனங்கள் ஒன்றும் செல்லவில்லை, பாதசாரிகளும் எவரும் இல்லை. ஆனாலும் சைகைவிளக்குகள் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டு இருக்கின்றன. வாகனங்கள், பாதசாரிகள் அற்ற தெருவில் எவரும் சைகை விளக்குகள் பற்றி அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. அவை தன்னிச்சையாக ஆவர்த்தன ஒழுங்கில் தமது வேலையை கச்சிதமாக செய்துகொண்டு இருக்கின்றன. ஆனால், ஒருவனின் மூளையை இந்த சைகை விளக்குகள் குடைகின்றன.
சரி, இப்படி வைத்துக்கொள்வோம். அமைதியான ஓர் தனித்தீவு; அங்கும் தெருக்கள், சைகை விளக்குகள் காணப்படுகின்றன. ஒருவன் மட்டுமே அத்தீவில் இருக்கின்றான். அவனிடம் வாகன வசதியும் இருக்கின்றது. அத்தீவில் அவன் தவிர வேறு ஒருவரும் வாசம் செய்யவில்லையென்று அவனுக்கும் மிகநன்றாக தெரியும். அவன் வீதி ஒழுங்கு நடைமுறைகளை அங்கு பின்பற்றவேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. ஆனாலும், அந்த இளைஞன் சைகை விளக்கில் சிவப்பு நிறம் ஒளிரும்போது வாகனத்தை பிடிவாதமாக நிறுத்துகின்றான், சைகை விளக்கில் பச்சை நிறம் ஒளிரும்போது வாகனத்தை நகர்த்துகின்றான்.
அவன் ஏன் இப்படிச் செய்யவேண்டும்? அவன் ஏன் இப்படிச் செய்கின்றான்? சிலர் அவனுக்கு “பைத்தியம்” என்று கூறக்கூடும். சிலர் அவனைப்பார்த்து “பிழைக்கத் தெரியாதவன்” என்று கூறி பரிதாபப்படக்கூடும். சிலர் அவனை “சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவன்” என்று கூறி பாராட்டக்கூடும். ஆனால் அந்த இளைஞனுக்கு மட்டும் தன்னைச்சுற்றி உண்மையில் எப்படியான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று தெரிந்தது. இன்னொருவிதமாக கூறுவதானால் பொதுவாக மற்றவர்கள் தரிசிக்காத ஓர் கோணத்தில் உலகை அவன் தரிசித்துக் கொண்டு இருந்தான். அவனது கற்பனை உலகில் சடப்பொருட்களின் ஒவ்வொரு அசைவுகளிற்கும் பின்னால், சடப்பொருட்களின் ஒவ்வொருவிதமான தோற்றங்களிற்கும் பின்னால் பலப்பல அர்த்தங்கள் பொதிந்து இருந்தன. இதை எப்படிக்கூறலாம்?
நல்லது, நாங்கள் நோயினால் பீடிக்கப்பட்டு வைத்தியரிடம் செல்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். எமது சாதாரண கண்களிற்கு நோயினால் நாம் அடைகின்ற வேதனைகளை மட்டுமே பார்க்கக்கூடியதாக, உணரக்கூடியதாக இருக்கும். ஆனால் வைத்தியரின் பார்வையில் எங்கள் உடலினுள் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைவரை எப்படியான மாற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன என்று விரிவான விபரங்கள் தெரிந்து இருக்கும். இவ்வாறே, ஓர் சுவரில் குறுக்கு, நெடுக்காய் கீறப்பட்ட நான்கு கோடுகள் ஒருவனின் சாதாரண பார்வையில் தெரிகின்ற அதேசமயம், கலையை இரசிப்பவன் கண்களில் அங்கு ஓர் அற்புதமான ஓவியம் காட்சியளிக்கும்.
அதாவது, மாறுபடாத ஒருவிடயம் மாறுபட்ட பல்வேறு பார்வைகளில் பல்வேறு அர்த்தங்களை, விளக்கங்களை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும். இங்கு கதையில் நாயகனாக வருகின்ற இளைஞன் இயற்கை, விஞ்ஞானம், அரசியல், கலை, வாழ்வியல் சம்மந்தமாக தான் மாறுபட்ட பார்வையில் தரிசிக்கின்ற பல்வேறு விடயங்களின் சில பகுதிகளை ஓர் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானியுடன், அரச தலைவருடன், மத பீடாதிபதிகளுடன் இன்னும் பலருடன் பகிர்ந்து கொள்கின்றான். இப்போது நாங்கள் வாழ்கின்ற இந்த உலகில் என்ன நடக்கின்றது, இந்த உலகம் எப்படி இயங்குகின்றது போன்றவைபற்றி அந்த இளைஞனும் சில உண்மைகளை அனுபவரீதியாக கண்டறிகின்றான்.
உலகில் காலங்காலமாக லட்சோப லட்சம் அறிஞர்கள், விஞ்ஞானிகள் இயற்கை, உயிர்வாழ்வு, சடப்பொருட்கள் இவற்றுக்கு இடையிலான தொடர்புகளை, இவற்றின் பின்னால் புதைந்துள்ள இரகசியங்களை கண்டுபிடிப்பதில், உணர்வதில் முயற்சி செய்து இருகின்றார்கள், முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். அந்த லட்சோப லட்சம் பேரில் இங்கு கதையில் வருகின்ற இளைஞனும் ஒருவனாக வருகின்றான். அறிவியல், வாழ்வியல், சமூகவியல் ரீதியாக ஆராயப்படவேண்டிய பல்வேறு விடயங்களை அலசிப்பார்த்தபின்னர், உணர்ந்தபின்னர் ஓர் விண்கலம் விண்ணிற்கு சென்று பின்னர் பாதுகாப்பாக பூமியில் தரை இறங்குவதுபோல் அந்த இளைஞனும் வேறுபட்ட பார்வையில் தான் கண்ணுற்ற கற்பனை உலகில் இருந்து விடுபட்டு சாதாரண – சாமானிய பார்வைக்கோணத்தின் அடிப்படையில் வாழ்கின்ற உலகிற்கு திரும்புகின்றான்.
மனிதர் எல்லோரும் சிந்திக்கின்றார்கள். ஆனால், ஒருசிலரே தமது சிந்தனைகளை மற்றவர்களுடன் துணிந்து பகிரங்கமாக பகிர்ந்துகொள்கின்றார்கள். அதிலும் ஒரு சிலருக்கே தமது சிந்தனைகளை சீரிய சிந்தனையாளர்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. அதிலும் ஒரு சிலரது சிந்தனைகளையே உலகம் “ஆஹா! ஓஹோ!” என்று பாராட்டி ஏற்றுக்கொள்கின்றது. அதற்காக பாராட்டு பெறுபவர்களின் சிந்தனைகள் எல்லாம் துல்லியமானவை, சரியானவை என்று கூறுவதற்கு இல்லை. இதுபோலவே, புறக்கணிப்பு செய்யப்பட்டவர்களின் சிந்தனைகள் எல்லாம் தவறானவை என்றும் கூறுவதற்கு இல்லை. தனது வாழ்வின் ஒரு பகுதியில் சீரிய சிந்தனையாளனாக மிளிர்கின்ற ஒருவன் தனது வாழ்வின் இன்னோர் பகுதியில் முட்டாளாக, ஞான சூனியமாக காணப்படுகின்றான். இதுபோலவே, முட்டாளாக இருப்பவன் தனது வாழ்வின் ஒரு கட்டத்தில் அறிஞனாக பரிணமிக்கின்றான்.
இயந்திரமயமான இந்த நவீன உலகில் சாதரணமாக மக்களால் இலகுவாக செய்யப்படக்கூடிய காரியங்கள் எல்லாம் வசதிகள், வாய்ப்புக்கள் மட்டும் உள்ள ஒரு சிலரால் மட்டுமே சாதிக்கப்படமுடியும் எனப்படுகின்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Harvard பல்கலைக்கழகத்தில் அல்லது MITஇல் கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அறிஞர்கள் என்று இல்லை. பள்ளிக்கூடப்பக்கமே செல்லாத ஓர் தாய் சிறந்த சிறந்ததொரு அறிஞராக திகழ முடியும். காலம், சூழ்நிலை ஒருவனின் தனிப்பட்ட வாழ்வின் போக்கினை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தினாலும் சமூக அங்கீகாரம் கிடைப்பது, கிடைக்காதது ஒருபுறம் இருக்க அனுபவங்கள், உணர்வுகள் என்பவை அனைவருக்கும் பொதுவானவை.
இங்கு கதையில் கூறப்படுகின்ற அறிவியல், வாழ்வியல் சிந்தனைகள், தத்துவங்கள் ஓர் தனிமனிதனின் கண்டுபிடிப்பு அல்ல. குழந்தையாக இருந்தபோது அவனுக்கு கையைப்பிடித்து “அ” எழுதக்கற்றுக்கொடுத்த ஆசான் தொடக்கம், ஆயிரக்கணக்கான மணித்தியாலங்கள் அவனுடன் பல்வேறு விடயங்கள் பற்றி அளவளாவிய நண்பர்கள், அவனது உடல் உபாதைகளை நீக்குவதற்கு உதவிய மருத்துவர்கள், அவனை அக்கறையுடன் பராமரித்த தாதிகள்வரை ஓர் மக்கள்கூட்டம் இதன் பின்னால் சம்மந்தப்பட்டு உள்ளது. கதையில் இந்த இளைஞன் ஓர் தொகுப்பாளன் மாத்திரமே! “ஓர் மனிதனின் சில நாட்கள் | கற்பனை விஞ்ஞான கதை” உங்களுக்கு நிச்சயம் ஓர் வித்தியாசமான பயனுள்ள அனுபவத்தை தரும் என்பதை பணிவுடன் கூறிக்கொள்கின்றோம்.
இப்போது கற்பனை உலகம் திறக்கின்றது… தயக்கமின்றி உள்ளே வாருங்கள்!
J Zero L Org