“ஓர் கதையை சும்மா கூறிவிட்டு செல்வதற்கு இவ்வளவு எடுப்புக்கள் தேவைதானா?” என்று நீங்கள் சலித்துக்கொள்ளக்கூடும். இதுபோலவே, “ஒருவரின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவங்கள் இளம்பிராயத்திலேயே சுயசரிதை போல் எழுதப்படுவதற்கு அவர் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்?” என்றும் நீங்கள் எண்ணக்கூடும். மேலும், “கற்பனை விஞ்ஞான கதை” எனப்படுகின்ற பதம் உங்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
முதலாவதாக, “ஓர் மனிதனின் சில நாட்கள் | கற்பனை விஞ்ஞான கதை” ஓர் தனிமனிதன் மட்டும் சம்பந்தப்பட்ட கதை இல்லை. இதன் பின்னால் ஓர் மக்கள்கூட்டம் – மனிதகுலம் சம்மந்தப்பட்டு இருக்கின்றது.
அடுத்ததாக, மனிதனும், இயற்கையும் சம்மந்தப்பட்ட சில அறிவியல் விளக்கங்களை வழங்குவதற்கு இரண்டுவரி சூத்திரங்கள் போதுமானவை இல்லை. விரிவான தரவுகள் கொடுக்கப்படவேண்டும். எனவே, ஓர் குறிப்பிட்ட அளவிற்கு சுயசரிதம் தேவைப்படுகின்றது.
இங்கு விஞ்ஞானம் ஓர் பகுதியாக வருகின்றதேயொழிய விஞ்ஞானமே கதையின் கருப்பொருள் அல்ல. மேலும், விஞ்ஞான கோட்பாடுகள், நிபந்தனைகள் ஓர் பகுதியாகவே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. தூய விஞ்ஞான சிந்தனை என்பதாக நில்லாது, அதற்கு அப்பால் ஒருபடி சென்று கற்பனையுலகில் பல்வேறு விடயங்கள் தர்க்கிக்கப்படுகின்றன. இதனாலேயே “கற்பனை விஞ்ஞானம்” எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது. உங்களுக்கு இன்னமும் தெளிவாக கூறுவதானால் இது ஓர் விஞ்ஞான புனைகதை [ Science Fiction] இல்லை.
இறுதியாக, ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான அக்கறை என்பது தவிர, இங்கு கதையில் கதாசிரியர் எதுவித மதங்களுக்கோ அல்லது மொழிகளுக்கோ அல்லது இனங்களுக்கோ அல்லது அரசியல் சித்தாந்தங்களிற்கோ ஆதரவானவரோ அல்லது எதிரானவரோ அல்லர் என்பதையும் கருத்தில் வைத்து இருங்கள்.
J Zero L Org